Thursday, November 6, 2014

ஹலோ சார் டாக்ஸி வேணுமா..? - அகவை நூறில் அசத்தும் டிரைவர்!



கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் சார்லஸ் மைக்கேல் டி-சோசா, அங்கு டாக்ஸி ஓட்டுகிறார். இதில் என்னங்க ஆச்சர்யம் என்கிறீர்களா.....மைக்கேல் டி-சோசா கடந்த மாதம் , செஞ்சுரி அடித்திருக்கிறார். அதாவது, ஒன்-டே கிரிக்கெட் மேட்ச்சிலோ அல்லது T20- போட்டியிலோ செஞ்சுரி அடிக்கவில்லை; நிஜ வாழ்க்கையில்! ஆம், கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று தனது நுறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் மனிதர்.

100 வயதை தொட்டாலும் மனிதர் அசராமல் இன்னும் அசால்ட்டாக நடக்கிறார்; ஓடுகிறார்; உடற்பயிற்சி செய்கிறார்; அதைவிட முக்கியமாக, இன்னும் கார் ஓட்டுவதில் பிஸியானவராக இருக்கிறார்.

சார்லஸ் மைக்கேல் டி-சோசாவின் கதை ரொம்ப சுவாரஸ்யமானது.

பெத்லஹேமில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஒரு கிரேக்கக் குடும்பத்தில், 10-வது மகனாகப் பிறந்த மைக்கேல் டி-சோசா. பிரிட்டிஷ் ராணுவத்தில் டிரைவராகப் பணிபுரிந்தவர். அஸ்ஸாம், பீகார், குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களுக்கு, அன்றைய பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுக்கு கார் டிரைவராகப் பணிபுரிந்த அனுபவம் மைக்கேலுக்கு உண்டு. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தனது டிரைவர் தொழிலை தொடர்ந்து செய்துவருகிறார்.

மைக்கேலிடம் பேசினோம். கன்னடம் கலந்த தமிழில் மழலையாகப் பேசினார். ‘‘இந்த வயசுலேயும் நான் உற்சாகமா இருக்கக் காரணம் - டிரைவிங்தான். அந்தக் காலத்தில் போர் சமயங்கள்ல , ராணுவத் தளவாடங்களுக்குள்ள ஜீப் ஓட்டுறது ரொம்பக் கஷ்டமா இருக்கும். 20 வயதில் கார் ஓட்டத்துவங்கி கிட்டத்தட்ட 80 வருஷமா கார் ஓட்டுறேன். பென்ஸ், பிஎம்டபிள்யூ, வால்வோ, ஜாகுவார், ஃபோர்டுனு எல்லா பிரபல கார்களையும் ஓட்டின அனுபவம் எனக்கு உண்டு. ஆனா, எனக்கு மேனுவல் கியர் கொண்ட கார்தான் ரொம்பப் பிடிக்கும். என் இளமைக் காலத்தில் நான் ஓட்டணும்னு நினைச்சு இப்போ வரைக்கும் ஓட்ட முடியாத கார் ஒண்ணே ஒன்னுதான்... அது - ப்ளைமவுத்!

அந்தக் காலத்தில் காமராஜர் வெச்சிருந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்போதைக்கு என்னை ரொம்பவும் கவர்ந்த கார் - சத்தியமா மாருதி ஆல்ட்டோதான்! ஆல்ட்டோவில் இருக்கும் ஹேண்ட்லிங், பிரேக்கிங் வேற எந்த கார்கள்லேயும் நல்லா இருக்கிறதா எனக்குத் தெரியலை!’’ என்று சொல்லி அதிரச் சிரித்தார் மைக்கேல்.



உலகில் இதற்கு முன்பு செஞ்சுரி அடித்த டிரைவர்கள் இருவர். ஒருவர், நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்வர்டு; (வயது 106) இன்னொருவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரெட் ஹேல், . இதில், எட்வர்டு இன்னும் காய்கறி வாங்க, ஷாப்பிங் செய்ய என்று தனது ஃபோர்டு காரைப் பயன்படுத்துகிறாராம். ஃப்ரெட் ஹேல், இப்போது உயிருடன் இல்லை.

சதம் அடித்த மங்களூர் மைக்கேலிடம் மாருதி ஆல்ட்டோ இருக்கிறது. பிக்அப், டிராப் போன்ற சிறு சிறு வேலைகள் செய்து வருவதாகச் சொன்னார். இப்போது, உலகில் பிழைப்புக்காக கார் ஓட்டும் சென்டனேரியன் டிரைவர் - சார்லஸ் மைக்கேல் டி-சோசா மட்டுமே.

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024