அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான், தகவல் பெறும் உரிமைச் சட்டம். வெளிநாடுகளில் தகவல் கேட்டு விண்ணப்பித்த ஒரு வாரத்தில், அதற்கான உரிய பதில்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் அரசு நடவடிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாக்குவதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வேகம் புல்லட் ரயில் அளவில் இருந்தது. அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் அளவிலும், இப்போது போனால் போகிறது என்று பாசஞ்சர் அளவிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது, தகவல் கேட்டு விண்ணப்பித்தால் அதற்கு உரிய பதில், உடனடியாக கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைக்காததால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி சிறிது, சிறிதாக ஆரம்பித்த சிக்கல் இப்போது, மத்திய தகவல் ஆணையத்தில் வந்து நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜிவ் மாதூர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ஓய்வு பெற்றார். தலைமை ஆணையரை நியமிக்கும் குழுவில், எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால் புதிய தலைவர் கடந்த 2 மாதங்களாக நியமிக்கப்படவில்லை. மேலும் 10 தகவல் ஆணையர் பணியிடங்களில் 3 காலியாக உள்ளது. இதனால், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கிடைக்காத ஏராளமானவர்கள், மத்திய தகவல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பிவிட்டு மோட்டுவளையத்தை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 31ம் தேதி வரை இதுபோன்று 24,150 புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் இது குறித்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் மத்திய தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நியமிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் ஆணையம் நியமனம் செய்யப்படலாம். இந்த நடவடிக்கையை முன்னரே செய்திருந்தால், புதிய ஆணையரின் வேலைப்பளு குறைந்திருக்கும்; தகவல் கேட்டு விண்ணப்பித்த ஏராளமானவர்களுக்கும் உடனடியாக பதில் கிடைத்திருக்கும். தாமதங்களுக்கு இடம் தராமல் இருப்பதே அரசுக்கு தரும் பலம்.
No comments:
Post a Comment