Friday, November 7, 2014

இனி, அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது

நரேந்திர மோடி பிரதமராக இந்த ஆண்டு மே மாதத்தில் பொறுப்பேற்றார். அவர் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பும், அதன்பிறகும், அதிகாரிகளோடு நேரடி தொடர்பு ஏற்படுத்தி, அவர்களோடு கூட்டங்கள் நடத்தி, ஆய்வுகளையும் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் முதல்–மந்திரியாக இருந்த நேரத்திலும் இதையே தனது பணிமுறையாகக்கொண்டு செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், அதில் வெற்றியும் கண்டார். திறமையான அதிகாரிகளை அடையாளம் கண்டுகொள்வதில் அவருக்கு நிகர் அவரே. அவர் பதவிகாலத்தில் தற்போது குஜராத் மாநில தலைமை செயலாளராக பணிபுரியும் ஜெகதீசபாண்டியன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திருப்புகழ், நடராஜன், ஜெயந்தி ரவி, தாரா, தென்னரசன் மற்றும் பல மாவட்ட கலெக்டர்களாக, முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை சரியாக மதிப்பிட்டு, அவர்கள் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களோ, அந்த துறை தலைமைப்பொறுப்பில் நியமித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களது ஆலோசனைகளையும் அவ்வப்போது பெற்று, உரிய அரசு ஆணைகளை பிறப்பித்து வந்தார். பொதுவாக ஜனநாயகம் என்பது மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசு என்று ஆபிரகாம் லிங்கன் கூறினார். அந்த வகையில், மக்கள் அரசு என்பது சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகிய 4 தூண்களால் தாங்கிப்பிடிக்கப்படும் கட்டிலாகும். எப்படி ஒரு கட்டிலின் 4 கால்களும் தனியாக நின்றால்தான் விழாமல் இருக்குமோ அதுபோல, இந்த 4 தூண்களும் அவர்களுக்குரிய இடங்களில் தனித்துவத்தோடு பணியாற்றினால்தான், ஜனநாயகம் செழிக்கும்.

அந்த வகையில்தான், அதிகாரவர்க்கமும் பணியாற்றவேண்டும் என்ற உணர்வில் பதவி ஏற்கும் முன்பு, அனைத்து துறை செயலாளர்களிடமும் மன்மோகன்சிங் அரசாங்கத்தில் அந்த அதிகாரியின் துறை என்ன சாதித்தது?, எது தோல்வி அடைந்தது?, அதற்கான காரணம் என்ன? முழு சுதந்திரமும் இந்த ஆட்சியில் கொடுத்தால், அந்த அதிகாரியால் நிறைவேற்றிவிட முடியுமா? என்று தனக்கு பட்டியலிட்டுத்தர அமைச்சரவை செயலாளர் மூலமாக கேட்டு பெற்றுக்கொண்டார். பதவி ஏற்றவுடன் 72 துறைகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். ஒவ்வொரு அதிகாரியிடமும் சென்று அவர்களை அறிமுகப்படுத்தச் சொல்லி, அவர்களோடு கை கொடுத்தது அதிகாரிகளுக்கு புதிய உற்சாகத்தைக்கொடுத்தது. ‘நேர்மையான முடிவுகளை தைரியமாக எடுங்கள், பயமில்லாமல் பணியாற்றுங்கள், உங்களைப் பாதுகாக்க நான் இருக்கிறேன். ஆனால், மக்களுக்காக பணியாற்றுங்கள், பிரதமருக்காக அல்ல’ என்று அவர்கள் செல்லவேண்டிய பாதையை வகுத்துக்கொடுத்தார். இதுமட்டுமல்லாமல், அரசு செயலாளர்கள் எப்போதும் தன்னுடன் சமூகவலைத்தலங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். மூத்த அதிகாரிகளை அந்தந்த துறை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கலந்து ஆலோசிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், எல்லா முடிவுகளுமே ஆழ்ந்த விவாதத்துக்குப்பிறகே எடுக்கப்படுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பட்ஜெட் ஜூலை மாதம் 10–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இப்போது அடுத்த பட்ஜெட் மார்ச் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படவேண்டும். ஆனால், நரேந்திர மோடி இப்போதே அதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்கிவிட்டார். 80–க்கும் மேற்பட்ட செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை தன் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்து, வரப்போகிற பட்ஜெட் புதிய எண்ணங்களையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும், உங்கள் பணிகளில் அரசியல் தலையீடு என்பது கிஞ்சித்தும் இருக்காது, நாமெல்லாம் ஒரே அணியாக செயல்படுவோம், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, நெருக்கத்தைக் கொண்டுவர ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவோம், சிறந்த நிர்வாகத்துக்கு தயவுசெய்து உங்கள் எண்ணங்களை என்னுடன் தயக்கமில்லாமல் செல்போனில் பேசி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஒரு பிரதமர் இதற்குமேல் அதிகாரிகளுக்கு உற்சாகம் அளிக்கமுடியாது. எனவே, இனி செய்யவேண்டியதெல்லாம் அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது. அதிகாரிகள், பிரதமரின் கனவான பொருளாதாரத்தை சீரமைத்தல், விலைவாசியை குறைத்தல், உள்கட்டமைப்பு வசதிகள், உற்பத்தியை பெருக்குதல், வேலைவாய்ப்பை பெருக்குதல், மானியங்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை நிறைவேற்றும் வகையிலான முயற்சிகள் பட்ஜெட்டில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024