Sunday, November 2, 2014

மெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி? டாக்டர் ரவிஷங்கர்




நம் ஊரில் சிலர் இப்போது விஜயகாந்த் போல சிவந்த கண்களுடன் திரிகிறார்கள். அதற்குக் காரணம் ‘மெட்ராஸ் ஐ’யா? இல்லை வேறு எதாவது பிரச்னையா?  கண் மருத்துவர் ரவிஷங்கரிடம் பேசினோம்.
அது என்ன ‘மெட்ராஸ் ஐ’?
மெட்ராஸில் 1970--களின்போது கண்களை ஒரு புதுவிதக் கண் நோய் தாக்கியது.  மெட்ராஸில் அந்த நோயைக் கண்டுபிடித்த காரணத்தால், ‘மெட்ராஸ் ஐ’ எனப் பெயர் வைத்தார்கள். இது மிக வேகமாகப் பரவக்கூடியது. முன்பு வெயில் காலங்களிலும், மழை சீசன் தொடங்கும்போதும் வந்த இந்த கண் நோய், இப்போது எல்லா சீசன்களிலும் வருகிறது. அடினோ (Adeno) வைரஸால் வரும் இந்த நோயை, மருத்துவ மொழியில் ‘வைரல் கன்ஜன்சிவிடிஸ்’ (viral conjuncivitis) என்பார்கள். மிகமிக வேகமாகப் பரவும் இந்த நோய், நிச்சயம் பரவும் வாய்ப்புள்ளது.
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பை எப்படிக் கண்டறிவது?
கண்கள் சிவந்திருக்கும், கண்களில் மண் இருப்பது போன்று அரிப்பு ஏற்படும், கண்கள் வீங்கிவிடும், கண்களில் எப்போதும் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். சிலருக்கு முகத்தில் நெறி கட்டிக்கொள்ளும். தொண்டை வலியும், காய்ச்சலும்கூட ஏற்படும்.
‘மெட்ராஸ் ஐ’யை எப்படித் தவிர்ப்பது?
‘மெட்ராஸ் ஐ’ வராமல் தடுக்க எந்த மருந்தும் கிடையாது. இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்ப்பதன் மூலம் நோய் பரவுவது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் உபயோகித்த பொருள்கள் மூலமோ, பாதிக்கப்பட்டவரது கண்ணீரின் மூலமோதான் பரவும். ‘மெட்ராஸ் ஐ’  பாதிக்கப்பட்டவர், கண்களைக் கசச்கிய பிறகு பயன்படுத்தும் பொருட்கள் மீது, மற்றவர்கள் கை வைத்தால் கிருமி அவரது கையிலும் தொற்றிக்கொள்ளும். அவர் தன் கண்களைத் தொடும்போது, கிருமி கண்ணில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர் கண்ணைத் தொட்டாலோ, பாதிக்கப்பட்டவருக்குக் கண்ணில் மருந்துவிட நேர்ந்தாலோ, கையை சோப் போட்டுக் கழுவ வேண்டும். அவரின் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சுய மருத்துவம் தவறு
தவறான மருந்து கண் பார்வையைப் பாதிக்கும். மருந்துக் கடைகளில் நாமே ஆயின்மென்ட்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. சிலர் ‘மெட்ராஸ் ஐ’ தானாகச் சரியாகிவிடும் என்று அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.  இதுவும் தவறு. முதலில் சரியானதுபோல் தோன்றினாலும், பின்னால் பெரிய பிரச்னைகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரைப் பார்க்கவேண்டும். தொடுதல், கண்ணீர் மூலம் நோய் பரவுவதால், செயற்கைக் கண்ணீர் மருந்து (Tear Substitutes), வைரஸ் பரவாமல் இருக்க ஆன்டி வைரஸ் ஜெல் என்று மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.  பிரியமானவர்களுக்கு  அன்பைத் தரலாம். கண் நோயைத் தரலாமா?
தள்ளியிருப்பது தவறில்லை
கண்ணாடியைப் பயன்படுத்தினால் ‘மெட்ராஸ் ஐ’ பரவாது என்பது தவறான தகவல். காற்று, கண்ணீர், கைப்பட்ட பொருள்கள் என பல வகைகளில் பரவக்கூடியது இந்த நோய். ‘மெட்ராஸ் ஐ’ தாக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் மாணவர்களே. உங்கள் குழந்தைக்கோ, உங்களுக்கோ மெட்ராஸ் ஐ பாதிப்பு இருந்தால், அது குணமாகும் வரை பள்ளிக்கும் வேலைக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் போல் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தற்காலிகமாகத் தள்ளியே இருங்கள்.
- கு.அஸ்வின்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024