லாயல்டி கார்டின் சூட்சமம்
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து சாமான்கள் வாங்குகின்றீர்கள். டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஒரு லாயல்டி கார்டை தருகின்றது. சாமான் வாங்கும்போது இந்த கார்டை காண்
பித்தால் பில் தொகையில் இரண்டு சதவிகிதம் டிஸ்கவுண்ட் என்று சொல்கின்றனர். லாயல்டி கார்டைப் பெற ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர். உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, குழந்தைகள் என எல்லா விவரத்தையும் நைசாய் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இதே போல் பல வருடங்களுக்கு அந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் வாடிக்கையாளர்களின் டேட்டா சேகரிக்கப்படுகின்றது. லாயல்டி கார்டு என்பதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதே கடையில் சாமான்கள் வாங்குவார்கள். அதே சமயம் டிஸ்கவுண்ட்டைப் பெற கார்டை காண்பிக்கவும் செய்வார்கள். அல்லது கார்டின் எண்ணைச் சொல்வார்கள். இங்கேதான் இருக்கின்றது டேட்டா சேகரிப்பின் முக்கிய அங்கம். பில்லில் லாயல்டி கார்டின் எண்ணை சேர்த்துக்கொள்வதால் இன்னார் இந்த சாமான் வாங்கினார் என்ற சூப்பர் டேட்டா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குக் கிடைக்கின்றது.
டேட்டா அளிக்கும் தகவல்
எந்தெந்த வாடிக்கையாளர் என்னென்ன பொருட்களை எப்போது (தேதி மற்றும் நேரம் வாரியாக) வாங்கினார் என்ற டேட்டா கைக்கு அடக்கமாக ஸ்டோருக்குக் கிடைத்துவிடும். கையில் இருக்கும் டேட்டாவைப் பீராய்ந்தால் குழந்தைகளுக்கான டூத் பேஸ்ட் வாடிக்கையாளர் எப்போது வாங்கினார் என்ற விவரத்தைப் பார்க்கலாம். சாதாரணமாக குழந்தைகளுக்கு துலக்கக்கூடிய அளவிற்கு பற்கள் கிட்டத்தட்ட ஒரு வயதில் வரும். அந்த டூத் பேஸ்ட்டை ஒரு வாடிக்கையாளர் வாங்கிய கால கட்டத்தில் இருந்து ஒரு வருடத்திற்கு முன் பத்து மாத காலத்திற்கு என்னேன்ன பொருட்களை வாங்கினார் என்று பார்த்தால் கர்ப்பகாலத்தில் என்னென்ன பொருட்களை வாங்கினார் என ஸ்டோர் நிர்வாகம் தெரிந்துகொள்ளலாம். இதே போல் எல்லா வாடிக்கையாளர்களின் டேட்டாவையும் சேர்த்து வைத்து அலசினால் திகைப்படையச் செய்யும் பல உண்மைகள் கிடைக்கும்.
தள்ளுபடியெல்லாம் தகவலுக்காகத்தான்
ஏற்கெனவே சொன்னதைப் போல் கருவுற்றிருந்தபோது என்னென்ன பிராண்ட் சாமான்களை வாங்கினார்கள் என்பது ஒரு தகவல். வயது குறித்த தகவல் இருப்பதால் கருவுறும் வயதில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எந்த விதமான பொருட்களை கடையில் ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது அடுத்த தகவல்.
இத்தனைபேர் கருவுற்றிருக்கும் போது பெரும்பாலோனோர் வாங்கும் பொருட்களை வாங்குகின்றார்கள். கூடிய விரைவில் புதுவரவு (குழந்தை) வரும். அந்தப் புதுவரவுக்கு தேவைப்படும் பொருட்களை இந்த கால கட்டத்தில் ஸ்டாக் செய்யவேண்டும் என்பது மற்றுமொரு தகவல். அது மட்டுமா புது வரவிற்கு தேவைப்படும் பொருட்களுக்கான டிஸ்கவுண்ட் கூப்பன்களை அந்த வாடிக்கையாளருக்கு கொடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டிலேயே அந்த சாமான்களை வாங்கவைக்கலாம்.
வயது டேட்டாவும் சூப்பர் மார்க்கெட் வசம் இருப்பதால் அந்த சூப்பர் மார்க்கெட் இருக்கும் ஏரியாவில் கருவுறும் வயதில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் இல்லை என்றால் அந்தப் பருவத்திற்குத் தேவையான பொருட்களின் ஸ்டாக் அளவை குறைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் கருவுற்றிருப்பதை அவள் சொல்லாமலேயே கண்டறியும் திறன் கொண்டது அனலிடிக்ஸ் என்பதை கேட்டால் கொஞ்சம் கலக்கமாய் இருக்கின்றது இல்லையா?.
நன்கொடை கோரிக்கை
கொஞ்சம் இளகிய மனதுடையவர் நீங்கள். அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் வங்கிக்கணக்கை அனல்டிக்ஸில் ஆராய்ந்து வங்கி செய்யும் நல்ல காரியத்திற்கு நிதியுதவி கூட உங்களிடம் கேட்க வாய்ப்புள்ளது. இதே ஆன்லைனில் டொனேஷன் கொடுத்தால் அனலிடிக்ஸின் புண்ணியத்தால் உங்கள் ஈமெயிலுக்கு எக்கச்சக்க கோரிக்கைகள் கூட வரும் வாய்ப்புள்ளது. அட, இவ்வளவு தூரமா அனலிடிக்ஸ் உண்மைகளை கண்டறியும். என் வீட்டில் கொஞ்சமாய் பத்துலட்சம் ரூபாய் கருப்புப்பணம் இருக்கின்றதே! இதுவும் அனலிடிக்ஸின் மூலம் வெளிவந்துவிடுமா என்று கவலைப்படுகின்றீர்களா?
இலவசத்துக்காக தரும் தகவல்கள்
நம்மைப் பற்றிய விவரங்களைப் பதிய இவர்கள் யார்? யாரைக்கேட்டு செய்கின்றார்கள்? கர்ப்பம் போன்ற நமக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விஷயங்களை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்? வேறு யார்? நாமே தான். இரண்டு சதவிகித டிஸ்கவுண்டிற்கு ஆசைப்பட்டு மொத்த டேட்டாவையும் கொடுத்தோம். டிஸ்கவுண்ட்டோ, இலவசமோ நீங்களும் நானும் முதல் ஆளாய் டேட்டாவை கொடுக்க தயாராகின்றோமே? டிஸ்கவுண்டோ, இலவசமோ என்றில்லை கடன் தர ஒரு வங்கி தயாரென்றால் நாற்பது பக்க அக்ரிமெண்டை படித்தே பார்க்காமல் பெருக்கல் குறியிட்ட எல்லா இடத்திலும் கையெழுத்திடுகின்றோமே! அதே போல் காசு கேட்டால் காத தூரம் ஓடு. இலவசம் என்றால் துரத்திக்கொண்டு ஓடு என்ற மனநிலை நம் அனைவரிடமுமே தென்படும் ஒரு விஷயம்தானே!
வலைதளங்களின் மாய வலை
இந்தவிதமான மனப்பான்மை தான் நம்மை வலைதளங்கள் விரிக்கும் வலையில் மற்றும் ஸ்மார்ட் போன் ஆப்ஸ்களில் சுலபமாக விழ வைத்துவிடுகின்றது. என்ன அக்சஸ் பெர்மிஷன்கள் கேட்கின்றது என்பதை சற்றும் படிக்காமலேயே ஸ்மார்ட்போன் இலவச ஆப்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு யெஸ் யெஸ் என தட்டுகின்றோம். இலவச ஆப்ஸ்கள் கேட்கும் பெர்மிஷன்கள் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட், மெசேஜ், கால் லிஸ்ட் என அனைத்தையும் அக்செஸ் செய்யும் பெர்மிஷன்களாகும்.
நீங்கள் ஓரு வங்கி அதிகாரி என்றால் உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட அனைவரின் நம்பரும் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் – ஒரு சில உறவினர் மற்றும் நண்பர்கள் தவிர. வங்கியில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே ஒரு ஆபர் தர வேண்டுமென்றால் சுலபத்தில் உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருப்பவர்களை தொடர்பு கொண்டால் வேலை சுலபமாய் முடியுமல்லவா? இந்தவிதமான மார்க்கெட்டிங்கில் சக்சஸ் ரேட் சூப்பராய் இருக்கும் இல்லையா? ஓ! இதனால்தான் ஆப்ஸ்கள் இலவசமாய் கிடைக்கின்றதா?
தப்பு தப்பு. இனிமேல் இலவசமே வேண்டாம் என்று எல்லோரும் திருந்தினால் என்னவாகும். ஆப்ஸ்களின் விலை ஐயாயிரம், பத்தாயிரம் என எகிறும். பணம் கட்டி நாம் டவுன்லோட் செய்துவிடுவோமா என்ன? ஆப்ஸ் இன்டர்நெட் என்பதையேல்லாம் விடுங்கள். நாம் படிக்கும் செய்தித்தாள் மற்றும் வாராந்திர புத்தகங்களில் விளம்பரம் எதுவும் அச்சிடப்படாமல், டீவியில் விளம்பரம் இல்லாமல் ப்ரோகிராம் வேண்டுமென்றால் என்னவாகும்.
நியூஸ் பேப்பரின் விலை இருபத்தி ஐந்து ரூபாயும் டீவி சப்ஸ்கிரிப்ஷன் மாதத்திற்கு பத்தாயிரமுமாய் மாறிப்போகும். ஜிமெயில், பேஸ்புக், வாட்ஸ் அப் எல்லாம் உச்சபட்ச விலைக்கு போய்விடும். பல்லாயிரம் கோடி கொடுத்து வாட்ஸ் அப் சேவையை வாங்கி இலவசமாய் நமக்கு கொடுக்க மார்க் ஜூகர்பெர்குக்கு பைத்தியமா என்ன? சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்கள் பலவற்றை அள்ளிக்கொண்டுபோய் அனலைஸ் செய்து சாப்பிடத்தான். பெர்மிஷன்களுக்கு எஸ் என கிளிக் செய்யும் போது தனிமனித ரகசியங்களும் அலசப்படுகின்றதற்கான வாய்ப்பை கொடுத்துவிடுகின்றோம். என்ன சார் சுண்டைக்காய் சரக்கு. நான் என்ன டாட்டாவா, பிர்லாவா, அம்பானியா? எங்க கான்டாக்ட் லிஸ்ட்டை வைத்துக்கொண்டு சாதிப்பதற்கு என நீங்கள் கேட்கலாம். தனி மனிதனாக நீங்கள் நினைப்பதைப் போல் உங்களுடைய டேட்டா பெரிய அளவில் மதிப்பில்லாததாக தெரிந்தாலும் கூட்டமாகச் சேர்த்து டேட்டா பெறப்படும் போது அதில் மதிப்புக்கூட்டல் இருக்கவே செய்கின்றது.
டேட்டா எதையும் தாரை வார்க்காமல் இணையத்தில் செளகரியமான பல சேவைகளை அனுபவிக்க எக்கச்சக்க செலவாகும். நமக்கெல்லாம் அது கட்டுப்படியாகாது. டேட்டாவை தாரை வார்த்தால் எல்லாமே இலவசம்தான். அதனாலேயே நாம் சுலபத்தில் டேட்டாவை தாரைவார்க்கத் துணிகின்றோம். அனலிடிக்ஸிற்கு டேட்டா பஞ்சம் வரவே வராது என்பது இப்போது புரிகின்றதா?
cravi@seyyone.com
No comments:
Post a Comment