Monday, April 2, 2018

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு     02.04.2018



தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நாடு முழுவதுமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கிறது.

ஏப்ரல் 02 2018, 12:10 AM அரசாங்கமே அனைத்து சாலைவசதிகளையும் செய்யமுடியாத நிலையில், தனியாரே சாலைகளை அமைத்து, செயல்படுத்தி, பின்பு திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டப்படி பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்துக்கு அவர்களே சாலைகளை வடிவமைத்து, கட்டமைத்து, நிர்ணயித்து பராமரிக்கும் பொறுப்புகளை வைத்துக்கொள்வார்கள். ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைத்து, அந்தவழியாக செல்லும் இருசக்கர வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்களுக்கு எல்லாம் சுங்கக்கட்டணம் வசூலித்து, வருவாயின் ஒருபகுதியை தங்களுக்கும், ஒருபகுதியை அரசாங்கத்துக்கும் கொடுத்து வருகிறார்கள்.

இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 461 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 42 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளுக்கு அதாவது பரனூர்-விழுப்புரம், சென்னசமுத்திரம்-காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சீபுரம் மண்டலம், சூரப்பேட்டை-திருவள்ளூர், பட்டறை பெரும்புதூர்-திருவள்ளூர், திருத்தணி-திருவள்ளூர், வானகரம்-திருவள்ளூர், கணியூர்-கோயம்புத்தூர், ஆத்தூர்-சேலம், சாலைபுதூர்-தூத்துக்குடி, பள்ளிக்கொண்டா-வேலூர், வாணியம்பாடி-வேலூர், எட்டுவட்டம்-திருநெல்வேலி, கப்பலூர்-திருநெல்வேலி, நாங்குநேரி-திருநெல்வேலி, புதுக்கோட்டை-திருச்சி-மதுரை பிரதானசாலையில் உள்ள சிட்டம்பட்டி, பூதக்குடி-மதுரை, வெம்பாலக்குடி-சிவகங்கை, லட்சுமணப்பட்டி-சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு 10 சதவீத கட்டணமும், மற்ற கனரக வாகனங்களுக்கு 4 முதல் 6 சதவீத கட்டண உயர்வும் நேற்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு சாலைமேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் சென்னை-புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் அக்கரை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் நேற்று அமலுக்கு வந்தது.

இந்தக்கட்டண உயர்வு மூலம் பல அத்தியாவசிய பண்டங்களை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்களுக்கும் கட்டண உயர்வு விதிக்கப்படுவதால் அந்த பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கிறது. ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும். ஆனால், பலருடைய குறை என்னவென்றால், இத்தகைய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதும் இல்லை, தரம் உயர்த்தப்படுவதும் இல்லை. நெடுஞ்சாலைகளின் விதிப்படி சுங்கச்சாவடிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்சு வசதி, உணவுவசதி, சற்று தங்கும்வசதி, மருத்துவ வசதி போன்ற பல வசதிகள் போதுமான அளவில் இல்லை. ஆகவே, சுங்கக்கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதற்கு அனுமதி அளிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இதுபோன்ற அனைத்து வசதிகளையும் அளித்து, ஆங்காங்கு இடையில் பழுது ஏற்படும் வாகனங்களுக்கு ரிப்பேர் செய்வதற்கான வசதிகளையும் அளிக்கவேண்டும்.

அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்னென்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டுமோ, அவற்றையெல்லாம் செயல்படுத்தவேண்டும் என்பதுதான் வாகன ஓட்டிகளின் வேண்டுகோள் ஆகும். கட்டண உயர்வுக்கேற்றாற்போல சுங்கச்சாவடி வழியாக செல்பவர்களுக்கு கூடுதல் வசதிகளும் வழங்கப்படவேண்டும். குஜராத் மாநிலத்தில் கார்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதுபோல, தமிழ்நாட்டிலும் விலக்கு அளிக்கலாம் என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்கலாம்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...