Sunday, May 20, 2018

இனிப்பு தேசம் 06: காலை பானம், தேவை கூடுதல் கவனம்

Published : 19 May 2018 11:40 IST

மருத்துவர் கு. சிவராமன்




எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மற்ற எந்த நோயையும்விட நீரிழிவு நோயில் எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. “அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே எனச் சொல்றீங்களே! எதைத்தான் சாப்பிடறது?” என்ற கேள்வியோடு, மருத்துவர் முகத்தை வருத்தமாய்ப் பார்க்கும் நீரிழிவு நோயாளிகள் பலர். இந்த இனிப்பு தேசத்தில் ஏராளமான உன்னத உணவு வகைகள் அவர்களுக்கு உண்டு. தேவையெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் மட்டும்தான்.

காலை வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. அதிகாலையில் அந்த அளவு கொஞ்சம் கூடுதலாக உள்ளபோது நடு இரவில் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்; உறக்கத்தில் இருக்கும் நீரிழிவு நோயாளிக்கு அது சற்று ஆபத்தானது. நீரிழிவு நோயினருக்கு வரும் மாரடைப்பு அதிகம் வலியைத் தராது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இரவு உணவிலும் அதிகாலை பானத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

முதல் உணவு

கொஞ்சம் சீனி போட்டு கும்பகோணம் டிகிரி காபி குடிக்கலைன்னா அந்த நாளே போச்சு; மூன்று சப்பாத்தி சாப்பிட்டாலும், கடைசியா நான்கு உருண்டை தயிர் சோறு சாப்பிட்டாத்தான் தூக்கம் வரும் என்ற வறட்டுப் பிடிவாதங்களை நீரிழிவு நோயாளிகள் உடைத்தே ஆக வேண்டும். முதலில் காலை பானங்களைப் பற்றிப் பார்ப்போம்.

காபியைவிட நிச்சயம் தேநீர் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிளாக் டீ எனப்படும் வறத் தேநீர்-கட்டன் சாயா, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகிய தேநீர் வகைகள் ரத்த சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த நாளச்சுவர்களைச் சிதையாது பாதுகாப்பதிலும் உதவுவதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியாக மூணு முதல் ஆறு கோப்பை பிளாக் டீ அன்றாடம் அருந்தும் நீரிழிவு நோயாளிக்கு, இதய நோய் 60% தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. தேநீரில் கொட்டிக்கிடக்கும் பாலிபீனால்களும் தியானைன் சத்தும்தான் இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன.

பால் கூடாது

கிரீன் டீ என்பது, இந்த பாலிபீனால்கள் தேயிலையைப் பதப்படுத்தும்போதும் மணச்செறிவூட்டுகையிலும் இழக்கப்பட்டுவிடாமல், அப்படியே உலரவைத்து எடுக்கப்படுபவை. அதனால்தான் கிரீன் டீக்கு மதிப்பு கொஞ்சம் கூடுதல், விலையும் கூடுதல். கிரீன் டீயின் விலை அதிகம் என நினைத்தால், பிளாக் டீ குடித்தாலும் கிட்டத்தட்ட அதே பலன் கிடைக்கும். பிளாக் டீயோ கிரீன் டீயோ தேநீருக்குப் பால் சேர்த்தால், அதன் பலன் சட்டென்று சரிந்துவிடும். தேநீரில் பாலை ஊற்றியதும் பாலிபீனால்கள் சிதைவடைந்துவிடுவதால், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மை, கேபிலரி பாதுகாப்பு எல்லாம் குறைந்து போய்விடுகிறதாம். இனி பாலில்லாத பிளாக் டீ அல்லது கிரீன் டீ நீரிழிவு நோயினரின் தேர்வு பானமாக இருக்கட்டும்.

“பால் வேண்டாம். துளியூண்டு சீனி?” என்று சிலர் கேட்கலாம். கூடவே கூடாது. இன்னொரு முக்கிய விஷயம் நீரிழிவு நோய் மிகச் சிறந்த கட்டுப்பாடு வரும்வரை நாட்டுச் சர்க்கரை, தென்னைச் சர்க்கரை, பனஞ் சர்க்கரை என எந்த வகை சர்க்கரையும் கொஞ்ச காலத்துக்கு வேண்டாம்.

சுக்ரலோஸ் இன்னும் மோசம்

நீரிழிவு நோய் இன்னும் வரவில்லை. வயது 35-யைத் தாண்டுகிறது. பரம்பரைச் சொத்தாக நீரிழிவு நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்பவரும், இனிப்பு சுவைக்குத் தேனோ பனங்கருப்படியோ கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். கரும்பு வெல்லம் என்றால், அதை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஸ் சேர்க்காத வெல்லத்தூளைக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். 40 வயதைத் தாண்டும் எல்லோருமே இனிப்பு, உப்பு சுவைகளைக் குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவையைக் கூட்டுவது நீரிழிவு இதய நோய்கள் வராது காக்கும்.

இனிப்பு வேண்டாம். செயற்கை இனிப்பு? இன்றைக்கு ஸீரோ கலோரி எனச் சந்தையில் ஏராளமாய்ப் புழங்கும் செயற்கைச் சர்க்கரையையும் சற்று எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுக்ரலோஸ் இன்று உலகச் சந்தையை ஆக்ரமித்துள்ள செயற்கைச் சர்க்கரை. ஒரிஜினல் சர்க்கரை மூலக்கூறுகளில், சில அணுக்களை நீக்கிவிட்டு, குளோரின் அணுக்களைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இனிப்பு, வெள்ளைச் சீனியைவிட 600 மடங்கு அதிக இனிப்பைத் தரும்.

முதலில் “இது முற்றிலும் பாதுகாப்பானது. உடலில் எந்த உறுப்போடும் பணியாற்றாது. முற்றிலும் இன்னெர்ட் (inert )” எனப் பேசப்பட்டது. சமீப காலமாக ஆங்காங்கே “இல்லை இந்த சுக்ரலோஸ் முற்றிலும் இன்னெர்ட் கிடையாது. குடல் நுண்ணியிரியோடு சேர்ந்து சில ரசாயனங்களை உருவாக்குகிறது. 450 பாரன்ஹீட்வரை உடையாது எனச் சொல்லப்பட்டாலும், சில சூழலில் அதற்கு முன்பே உடைந்துவிடுகிறது. அது புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுமா?” என ஆராயத் தொடங்கியுள்ளனர்.

அதற்குள் செயற்கைச் சர்க்கரையில் செய்த கேசரி, குலாப் ஜாமூன் என இறங்குவது நிச்சயம் நல்லதல்ல. கசப்புத் தேநீரை காதலித்தே ஆக வேண்டும். கசப்பு, நீரிழிவுக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பும்கூட.

சந்தையில் மூலிகைத் தேநீர் பிரபலம். அதுவும் பூங்காக்கள் வாசலில் திடீர் காபடேரியாக்கள், சூப் கடைகள் நிறையவே முளைத்துவிட்டன. அக்கறை, நல்லெண்ணத்துடன் அவற்றைச் சமைத்துவரும் சிறு வணிகர்களை நிச்சயம் ஊக்குவிக்கலாம். அதேநேரம், எல்லாச் சந்தையிலும் வணிகத்தை மட்டுமே பார்க்கும் திடீர் காளான் வணிகர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வேளைக்கு ஒரு தேநீர்

இத்தொடரில் முன்பு பேசிய ஆவாரைக் குடிநீர் தேயிலை சேர்க்காத ஒரு மூலிகை பானம்தான். நிறைய வாசகர்கள் ஆவாரையோடு இணந்துள்ள பிற மூலிகைகள் என்ன எனக் கேட்டிருந்தனர். ஆவாரை, கொன்றை, நாவல், கோஷ்டம், மருதம், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு எனும் ஏழு மூலிகைகள் சேர்ந்த இந்தப் பானம் கண்டிப்பாய் நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறப்புப் பானம். நீரிழிவு நோயர்கள், தாங்களாகவே களத்தில் இறங்காமல், அருகிலுள்ள அரசு சித்த மருத்துவரை அணுகி, ஒருவார்த்தை ஆலோசித்துவிட்டு, இப்பானத்தை வாங்கி அருந்தலாம். வீட்டிலேயேகூட மூலிகைத் தேநீர் தயாரிக்க முடியும்.

லவங்கப்பட்டை, பிரியாணியில் சேர்க்கப்படும் ஒரு மூலிகை மணமூட்டி. நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டையைத் தேனீரோடு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட சர்க்கரையைக் கட்டுப்படுவதில் பயனளிப்பதை, கூடவே கெட்ட கொழுப்பைக் குறைப்பதையும் ஆராய்ந்து சொல்லியிருக்கின்றனர். செம்பருத்திப்பூ இதழைத் தேயிலையுடன் சேர்த்துத் தேநீராக்கி அருந்த, கட்டுப்படாத நீரிழிவில் தொடரும் இதய நோய் வராதிருக்க உதவிடும்.

நடைப்பயிற்சிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சமாக பிளாக் டீ, அலுவலகப் பணிக்கு இடையே சோர்வு நீக்க கிரீன் டீ, கொஞ்சம் கூடுதல் காஃபீன் மணத்தோடு தேநீர் வேண்டும் எனில் சீனத்து ஊலாங் டீ, மாலையில் லவங்கப் பட்டை, செம்பருத்தி இதழ் சேர்ந்த மூலிகைத் தேநீர், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் முன்னதாக ஆவாரைக் குடி நீர் என நீரிழிவு நோயர் தங்கள் தேநீரைத் தேர்வு செய்துகொண்டால், எப்போதும் உற்சாகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024