Sunday, May 20, 2018


அனுபவம் புதுமை 05: எனக்கொரு ‘ட்ரீட்’டு வேணுமடா!

Published : 18 May 2018 11:03 IST

  கா. கார்த்திகேயன்




தொண்ணூறுகளில் பாக்கெட் மணி என்பது டீக்கும் வடைக்கும் மட்டுமே சரியாக இருக்கும். இன்றைக்குச் சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குத் தருகிற ‘பாக்கெட் மணி’யைப் பார்த்தால், பாக்கெட் முழுவதுமே ‘மணி’யாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பணத்தை வாங்கி பசங்க என்னதான் செய்கிறார்கள்? எங்கும் ‘ட்ரீட்’, எதிலும் ‘ட்ரீட்’, தொட்டதெற்கெல்லாம் ‘ட்ரீட்!’

படிப்பை முடித்ததற்காக, திருமணத்துக்காக, வீடு கட்டியதற்காக, அலுவலத்தில் புரோமோஷனுக்காக என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் முன்பு ‘ட்ரீட்’களும் அதற்கான காரணங்களும் இருந்தன.

ஆனால், இந்தக் காலத்துப் பசங்களின் கொண்டாட்டத்துக்கு வரையறையே கிடையாது. கல்லூரியில் ‘அரியர்’ இல்லாமல்கூட இருப்போம். ஆனால், ‘ட்ரீட்’ இல்லாமல் இருக்கவே மாட்டோம் என்கிற ரீதியில் பரீட்சையில் ‘பாஸா’னால் ‘ட்ரீட்’, ‘ஃபெயிலா’னாலும் ‘ட்ரீட்’, அப்பா ‘பாக்கெட் மணி’ கொடுத்தால் ‘ட்ரீட்’, ‘புரொஃபஸ’ரிடம் திட்டு வாங்கினாலும் ‘ட்ரீட்’, மருத்துவமனையில் சேர்ந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனாலும் ‘ட்ரீட்’, நண்பர்கள் சண்டை போட்டாலும் ‘ட்ரீட்’, மீண்டும் ஒன்று சேர்ந்தாலும் ‘ட்ரீட்’. அட, ஒரு வாரம் தொடர்ந்து காலேஜுக்கு வந்தால், அதுக்கும் ‘ட்ரீட்’ எனப் பட்டியல் அனுமார் வால் போல நீண்டுகொண்டே செல்கிறது.

எப்போதும் ‘ட்ரீட்’ மன நிலையிலேயே இருக்கும் சில இளைஞர்கள், கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போதும்கூட அதை விடுவதில்லை. ஒரு கட்டத்தில் கொண்டாட்டம் எல்லாம் காணமல் போய் திண்டாட்டம் வரும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார்கள். எப்போதும் ‘ட்ரீட்’ மனநிலையிலிருந்து பின்னர் மாட்டிக்கொண்டு முழித்த என் முன்னாள் மாணவரின் அனுபவமும் அந்த ரகம்தான்.

2006-ம் ஆண்டில் படித்த மாணவன். பெயர் மோகன். கல்லூரியில் அவனை ‘அல்டாப்’ மோகன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். அவனைப் போலப் புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்து நண்பர்களுக்கு ‘ட்ரீட்’ தருவதற்கு நிச்சயம் யாராலும் முடியாது. ‘ட்ரீட்’ வைப்பதற்குப் புதிய கடைகளைத் தேடி அலைவான்.

“பணத்தை இப்படியெல்லாம் செலவு செய்யாதே” என்று அறிவுரை வழங்கினால், “சரி சரி” என்று தலையாட்டுவான். ஆனால், அடுத்த சில நாட்களில் புதிய ‘ட்ரீட்’டுக்குத் தயாராகிவிடுவான். ஒரு முறை அவன் தந்தையிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது இதைப் பற்றிக் கேட்டேன்.

“ஏன் சார், இவ்வளவு செலவு செய்ய அனுமதி கொடுக்குறீங்க”.

“எங்க வீட்ல முதுகலை படிக்கிற முதல் தலைமுறை பையன் இவன்தான். நல்லாவும் படிக்கிறான். இப்படி எல்லாம் ‘ட்ரீட்’ தந்தாதான் மரியாதை கிடைக்கும்னு சொல்றான்” என்று அப்பாவியாகச் சொன்னார்.

“பாக்கெட் மணி தருவது தவறில்லை. ஆனா, அந்தப் பணத்தை ஈட்ட நீங்கள் படும் கஷ்டத்தையும் காட்டி வளர்க்கணும். அதுதான் பொறுப்புணர்வை வளர்க்கும்” என்று சொல்லி அனுப்பிவைத்தேன். இந்தச் சந்திப்பு நிகழ்ந்த இரண்டு நாட்கள் கழித்து ஒரு ‘ட்ரீட்’ வைத்தான் மோகன். என்ன காரணம் என மாணவர்களிடம் விசாரித்தபோது, அவன் புதிதாக ஒரு நாய்க் குட்டி வாங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. மோகனை அழைத்து, “ஏன்பா, செலவு பண்றதுக்கு வகைதொகை வேண்டாமா, எப்பவும் இப்படி ‘ட்ரீட்’ மனநிலையிலேயே இருந்தா எப்படி? என்றாவது ஒரு நாள் அவசரத் தேவைன்னா என்ன பண்ணுவ” என்றேன். அவனோ கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், “சார், ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் தேர்வாயிட்டேன். அடுத்து வேலைதான். பணத்துக்குப் பிரச்சினையே இல்ல” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அதன் பிறகு மோகனை நான்கு ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போதுதான் பார்த்தேன்.

“சார் வணக்கம்” என்று அவன் சொன்ன விதமே மனச்சோர்வுக்கு ஆளாகி இருந்தான் என்பதைத் தெளிவாகக் காட்டியது.

“மோகன், எப்படி இருக்க?”

“ஒரு வருஷமா கொஞ்சம் பிரச்சினை சார். 7 லட்சம் ரூபாய்வரை செலவாயிடுச்சு” என்றான்.

“ஏன், என்னாச்சு.”

“எதிர்பாராம ஒரு விபத்து நடந்துபோச்சு. ஒரு பையன் மேல வண்டியை மோதிட்டேன். அவனுக்குப் பயங்கர அடி, அவன் வண்டிக்கும் ரொம்ப சேதம். பிரச்சினையை மேற்கொண்டு வளர்க்காம, அந்தப் பையன் வீட்டுல பேசி, அவனோட மருத்துவச் செலவு, புது வண்டிக்கு ஆன செலவை ஏற்றுக்கொண்டு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு 7 லட்சம் ரூபாய் செலவாயிடுச்சு. வீட்ல பணம் கேட்க முடியாது; கடன் வாங்கித்தான் கொடுத்தேன். அந்தக் கடனை வட்டிகட்டி அடைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றான் சோகம் சூழ்ந்த முகத்துடன்.

“அடடா, கவனமா இருக்கக் கூடாதா? விபத்து எங்க ஏற்பட்டது?” என்றேன்

“மாமல்லபுரத்தில் சார்”

“உன்னோட ஆபீஸ் சென்னையிலதானே”

“ஆமா சார், வார இறுதிக் கொண்டாட்ட ‘ட்ரீட்’க்கு ஈசிஆர் போனப்பதான் இப்படி ஆயிடுச்சு” எனத் தயக்கத்துடன் சொன்னான்.

“படிக்குற காலத்துல ஆரம்பிச்ச இந்த ‘ட்ரீட்’ மோகம், இன்று எவ்ளோ பெரிய சிக்கலில் உன்னை இழுத்துவிட்டு இருக்குது பார்த்தியா” எனக் கோபத்துடன் சொன்னேன்.

“இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறையவே புரிந்துகொண்டேன். கடந்த ஆறு மாசமா யாருக்கும் ‘ட்ரீட்’ தரதில்ல. யாரு ‘ட்ரீட்’ வைத்தாலும் போறதில்லை” என்று விரக்தியாகப் பேசியவனிடம் குறுக்கிட்டேன்.

“கொண்டாட்டங்கள், பரிசுப் பொருட்கள், வாழ்த்துக்கள் அன்பின் வெளிப்பாடுதான். அதில் தப்பு ஏதும் இல்ல. ஆனா, அது வரையறைக்குள் தர்க்கரீதியா இருப்பது அவசியம். கடமையை நிறைவாய் செய்ததற்கும் அதைத் தொடர்வதற்கும் கொண்டாட்டம் அவசியம்தான். கடமையிலிருந்து விலகி நிற்கிற கொண்டாட்டம் தேவை இல்ல” என்றேன்.

மோகன் அதை ஆமோதித்தான். வரையறை இல்லாத கொண்டாட்டங்களுக்கு என்றும் மரியாதை கிடையாது அல்லவா?

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...