Friday, May 18, 2018

நலம் தரும் நான்கெழுத்து 22: தேடினால் தொலையும் தூக்கம்!

Published : 17 Feb 2018 11:02 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்





தூக்கம் என்பது ஆரோக்கியத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி

- தாமஸ் டெக்கர்


அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியில், மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. இதிலிருந்தே தூக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரியும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டுவந்திருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு –ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கையறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. என்னதான் அதிநவீன ஐபோனைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்முடைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட்டால் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஒன்றில் செருப்பைத் தொலைத்தது பற்றி வருத்தப்படவும், 20 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் மகளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படவும் தொடங்குகிறோம். ஏனென்றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும். இரவு வந்தவுடன் சிந்தனை வௌவால்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில்லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது ‘தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்’ என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும்.

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் ‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என ‘முதல் மரியாதை’ திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...