Saturday, May 19, 2018

தேசிய செய்திகள்

எடியூரப்பா பதவி நீடிக்குமா? பரபரப்பான அரசியலுக்கு இன்று தீர்வு





சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பலப்பரீட்சையின் போது, எடியூரப்பாவின் பதவி நீடிக்குமா? என்பது தெரிந்து விடும்.

மே 19, 2018, 05:42 AM
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக் காததால் குழப்பம் ஏற்பட்டது.

தேர்தல் நடந்த 222 இடங்களில் 78 இடங்களை பெற்ற காங்கிரசும், 37 இடங்களை பெற்ற குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா கடந்த புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். அப்போது, சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு அவர் ‘கெடு’ விதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த மனுவை விடிய விடிய விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது.

இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன், வாக்கெடுப்பை நடத்த மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. முதலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதாக கட்சியைச் சேர்ந்த போப்பையா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 4 மணிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையில் தாக்கல் செய்து பேசுவார். அதன்பிறகு எதிர்க் கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.

பின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், வெளிப்படையாக நடைபெறும். நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.

எடியூரப்பா அரசு பிழைக் குமா? அல்லது அற்ப ஆயுளில் கவிழுமா? என்பது இந்த பலப்பரீட்சையின்போது தெரிந்துவிடும்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது குறித்து எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், “சட்டசபையில் தன்னால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்றும் இதில் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். எனவே இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 36 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இது தவிர சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்ளனர். இந்த இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

காங்கிரசுக்கு உள்ள 78 எம்.எல்.ஏ.க்களில், ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பட்டீல் ஆகிய 2 பேரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பிவிட்ட அவர்கள் இன்று சட்டசபைக்கு வர மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்று சட்டசபைக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்பதை பொறுத்தே, நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற எடியூரப்பாவுக்கு எத்தனை பேரின் ஆதரவு தேவை என்பது அமையும்.

இதற்கிடையே, தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா விலைபேசி இழுத்து விடாமல் தடுக்க அவர்களை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஐதராபாத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலிலும், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள நோவோடெல் ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதலில் அவர்களை கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச்செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை மாற்றி, ஐதராபாத்துக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதற்காகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காகவும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்கள்.

முன்னதாக எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் தொடுத்த ‘ரிட்’ வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு எடியூரப்பா எழுதிய 2 கடிதங்களையும், அவரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன் நகல்கள், வழக்குதாரர் களுக்கு வழங்கப்பட்டது.

16-ந்தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சமான, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததை முகுல் ரோத்தகி வாசித்து காட்டினார்.

காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) அணி சார்பில் கவர்னருக்கு குமாரசாமி அளித்த கடிதத்தில் இடம் பெற்று இருந்த எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து பற்றி கேள்வி எழுப்பிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டார். ஆனால் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, “15-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே, எந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என தெரியும் முன்பே எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கக் கூடாது” என கூறினார்.

அபிஷேக் சிங்வியுடன் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான கபில் சிபல், “காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) அணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துக்களுடன் கடிதம் தரப்பட்ட நிலையில், கவர்னர் விருப்புரிமையை பயன் படுத்த முடியாது” என்று வாதிட்டார்.

அவர்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான ப.சிதம்பரம், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ. நியமன பிரச்சினையை எழுப்பி வாதிட்டார்.

வாதங்கள் முடிந்ததும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

* கர்நாடக சட்டசபையை நாளை (இன்று) கூட்டி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

* சட்டப்படி தற்காலிக சபாநாயகர் ஓட்டெடுப்பை நடத்துவார்.

* ஓட்டெடுப்பில் பங்கேற்க ஆங்கிலோ இந்திய சமூக எம். எல்.ஏ. நியமனம் கூடாது.

* ரகசிய ஓட்டெடுப்பு கூடாது. கைகளை உயர்த்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

* ஓட்டெடுப்புக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி.யும் அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.

* சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிற வரையில், அரசாங்கம் பெரிய அளவிலான கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது.

* எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தது அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பது பற்றி பின்னர் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...