Saturday, May 19, 2018

தலையங்கம்

3 நாட்கள் முதல்–மந்திரியா?, நீடிக்கும் முதல்–மந்திரியா?





கர்நாடக சட்டசபையில் இதுவரை இரண்டு முறை எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் 1983 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் தொங்கு சட்டசபை அமைந்து இருக்கிறது.

மே 19 2018, 03:00

கர்நாடக சட்டசபையில் இதுவரை இரண்டு முறை எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் 1983 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் தொங்கு சட்டசபை அமைந்து இருக்கிறது. அதுபோல கடந்த 12–ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலிலும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலை இருந்தது. காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் 15–ந்தேதி வெளிவந்தது. மொத்தம் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில், பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றிபெற்றன. ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் வேண்டியநிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லை. எதிர்பாராதவிதமாக காங்கிரசும்–மதசார்பற்ற ஜனதாதளமும் கைகோர்த்தன. 37 இடங்களில் வெற்றிபெற்ற மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியை முதல்–மந்திரியாக ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கூறியது.

இந்தநிலையில் பா.ஜ.க.வை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கவர்னரால் வழங்கப்பட்டது. உடனடியாக காங்கிரஸ் கட்சி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பா.ஜ.க. குதிரைபேரம் நடத்தி தங்கள் எம்.எல்.ஏ.க்களை பறித்துச்சென்றுவிடும் என்ற அச்சத்தில், தமிழ்நாட்டில் நடந்த ‘கூவத்தூர்’ சம்பவம்போல காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதிகளில் தங்கவைத்து கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு பெரிய அதிர்வை கொடுத்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பை போலீஸ் டி.ஜி.பி. வழங்கவேண்டும். இந்த வாக்கெடுப்பு முடியும்வரை எந்த பெரிய கொள்கை முடிவுகளையும் எடியூரப்பா எடுக்கக்கூடாது. வாக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்ற வகையில் ரகசிய ஓட்டெடுப்பு முறை பின்பற்றக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்த சட்டசபை உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்து எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்துவார். அதாவது, தீர்மானத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு பிளாக்காக எதிர்ப்பவர் யார்?, ஆதரிப்பவர் யார்?, நடுநிலை வகிப்பவர் யார்? என்று உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து தனித்தனியாக பெயர் சொல்லி கையை தூக்கச்சொல்லி தற்காலிக சபாநாயகர் கணக்கெடுப்பு நடத்துவார். தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் போபையாவை கவர்னர் நியமித்துள்ளார். 8 முறை எம்.எல்.ஏ.யாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஷ்பாண்டேயை நியமிப்பதுதான் சரியான மரபு என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இரு தரப்புமே நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறது. பா.ஜ.க. எங்களுக்கு 8 காங்கிரஸ், 2 மதசார்பற்ற ஜனதாதளம், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்கிறது. ஆனால் ஓட்டெடுப்பு முடிந்தபிறகுதான் பா.ஜ.க. முதல்–மந்திரியாக எடியூரப்பா நீடிப்பாரா? அல்லது 3 நாள் முதல்–மந்திரியாக அவரது பதவி பறிபோய்விடுமா? அல்லது மதசார்பற்ற ஜனதாதளம்–காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்குமா? என்பதெல்லாம் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...