Sunday, May 20, 2018

தேசிய செய்திகள்

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு



கவர்னர் அழைப்பை தொடர்ந்து கர்நாடக மாநில புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி(புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.

மே 20, 2018, 05:30 AM
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமியை ராஜ்பவனுக்கு வருமாறு கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில் கவர்னரை குமாரசாமி நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்தார்.

அப்போது ஆட்சி அமைக்க வருமாறு குமாரசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்கு பின் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு பெரும்பான்மையை நிரூபிக்காததால், அதன் முதல்-மந்திரி எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க கடந்த 15-ந் தேதி நான் உரிமை கோரினேன். அதன் அடிப்படையில் நேரில் வந்து சந்திக்குமாறு கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்தார்.

அதன் பேரில் கவர்னரை சந்தித்து பேசினேன். கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு எனக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் பதவி ஏற்பு விழா 23-ந் தேதி(புதன்கிழமை) நடைபெறும்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை கவர்னர் கொடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் தேவை இல்லை. அதற்குள்ளாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம்.

எங்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இன்னமும் பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள். இந்த கூட்டணி அமைய காரணமான சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எங்கள் பதவி ஏற்பு விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ்யாதவ் உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளோம்.

மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்த ஏதுவாக ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவோம். இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்களின் ஆலோசனை கூட்டம் குலாம்நபிஆசாத் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பதவி ஏற்பு விழா, மந்திரி பதவிகளை எவ்வாறு பகிர்ந்து கொள்வது, ஆளுக்கு எத்தனை மந்திரி பதவிகள், யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024