Sunday, May 20, 2018

மாவட்ட செய்திகள்

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு



சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாயினர்.

மே 20, 2018, 04:22 AM
சேலம்,

சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் அடையார் ஆனந்தபவன் ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நெய்காரப்பட்டியில் அடையார் ஆனந்தபவன் என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இங்கு உணவகம், தங்கும்விடுதி, ஐஸ்கிரீம் பார்லர், காபி ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 35 பெண்கள் உள்பட 90 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஓட்டலில் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சேலம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஓட்டலின் மேல்பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் தாக்குபிடிக்காமல் திடீரென சாய்ந்து, மேற்கூரையின் மீது சரிந்து விழுந்தது. அப்போது, ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது இரும்பு தகடுகள் மற்றும் ஹாலோபிரிக்ஸ் கற்கள் விழுந்ததால் அவர்கள் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், கொண்டலாம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் அங்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டலின் முன்பகுதியில் பலத்த சேதம் அடைந்ததால் இடிபாடுக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஓட்டலின் காபி மாஸ்டராக பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 25), ஓட்டலுக்குள் சாப்பிட்டு கொண்டிருந்த ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பெருமாநகரை சேர்ந்த நூர்அமீன் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நூர்அமீன் நண்பரான ஈரோட்டை சேர்ந்த சையதுஅலி (41), ஓட்டல் ஊழியர் சேலம் சின்னசீரகாபாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் சையது அலி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து, சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், சேலம் மேற்கு தாசில்தார் சுந்தரராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்து விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கட்டிட சுவர் இடிந்து விழாமல் இருப்பதற்காக ஓட்டலின் ஒருபகுதி முழுவதும் பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஓட்டலில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்த தகவலை அறிந்த நெய்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டலின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024