Sunday, May 6, 2018



ஆறு ஜனாதிபதிகளை உருவாக்கிய சென்னை பல்கலை
60வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பாராட்டு


சென்னை : ''தகவல் தொழில்நுட்பத்திலும், 'டிஜிட்டல்' பொருளாதாரத்திலும், தமிழகம் போற்றத்தக்கதாக உள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார். 06.05.2018
ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், சென்னை பல்கலை
சென்னை பல்கலையின், 160வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை நுாற்றாண்டு விழா கலையரங்கில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோஹித், தலைமை வகித்தார்.
விழாவில், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சென்னை பல்கலை, நாட்டை கட்டமைக்கும் பணியில், ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. தென் மாநிலத்தில், அறிவை மேம்படுத்துவதிலும், அறிவு கருத்துக்களை உருவாக்குவதிலும், வலுவான அடித்தளமிட்ட நிறுவனங்களில், இப்பல்கலை, முக்கிய பங்கு வகித்துள்ளது.பல்கலையின் தாய்பல்கலைகளின் தாயாக, சென்னை பல்கலை போற்றப்படுகிறது. இப்பல்கலை, ஆறு ஜனாதிபதிகளை உருவாக்கி உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர், இங்கு படித்தவர்கள். நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, இப்பல்கலையின் பழைய மாணவர். நோபல் பரிசு பெற்ற, சர்.சி.வி.ராமன், டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர், முன்னாள் தலைமை நீதிபதிகள் சுப்பாராவ், பதஞ்சலி சாஸ்திரி ஆகியோரும், இங்கு படித்தவர்களே.பெண் தலைவர்களான, சரோஜினி நாயுடு, துர்காபாய் தேஷ்முக், பசுமைப் புரட்சி ஏற்படுத்திய சி.சுப்பிரமணியம், விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 'கார்ப்பரேட்' நிறுவன தலைவர் இந்திரா நுாயி போன்றவரும், இங்கு படித்து பட்டம் பெற்றவர்கள்.தகவல் தொழில்நுட்பத்திலும், 'டிஜிட்டல்' பொருளாதாரத்திலும், தமிழகம் போற்றத்தக்கதாக உள்ளது. தமிழ், தொன்மையான மொழிகளில் ஒன்று. பல மொழிகளுக்கும், பல நுாற்றாண்டுகளுக்கும் முன்னரே, தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை படைத்த மொழி.தற்போதைய சூழல்,


இந்தியாவின் முக்கியமான அத்தியாயமாகும். நாம் வளர வேண்டிய சமுதாயமாக, விஸ்வரூபம் எடுக்க வேண்டி உள்ளது. வறுமையை, அவசரமாக ஒழிக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வு, கல்வி, அனைவருக்கும் மின் சக்தி, வீட்டுவசதி கிடைக்க வேண்டும்.நான்காவது தொழில் புரட்சியில், நம் நாடு வாய்ப்புகளையும், சவால்களையும், எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு பல்கலைகள், வழிகாட்டியாக இருக்க வேண்டும். தகுதி படைத்த இளைஞர்களை, தொழில் முனைவோர்களாகவும், வேலைவாய்ப்பு அளிப்போராகவும் உருவாக்குவதற்கான சூழலை வளர்த்தெடுப்பதில், தமிழகம் சுறுசுறுப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது.இது, இளைஞர்களுக்குரிய சரியான பாதை. உயர் கல்வி மேன்மை பெறுவதற்காக, மத்திய அரசு, ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 20 உயர்நிலை கல்வி நிறுவனங்களின், திறன் மேம்பாட்டை அதிகரிப்பதே, இத்திட்டத்தின் நோக்கம். இது தொடர்பாக, விரிவான திட்டத்தை, சென்னை பல்கலை தயாரித்துள்ளது. அதற்கு என் வாழ்த்துகள். இங்கு படித்து, உலகம் முழுவதும் பரவியுள்ள, முன்னாள் மாணவர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, அவர்களையும் செயல் திட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், இந்த வளாகத்திலிருந்து வெளியே செல்லும்போது, நீங்கள் படித்ததை, அடக்கத்துடன் எடுத்து செல்லுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியில், சமுதாயத்திற்கு ஏதேனும் செய்யுங்கள். உங்களை விட, இயலாதவர்களுக்கு உதவுங்கள். டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், சிலருக்கு மட்டும் சொந்தமானது அல்ல; அனைவருக்கும் சொந்தமானது. அங்கு நீங்கள் வருவதை, நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பெண் கல்வி :

சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள, குருநானக் கல்லுாரியில், புதிய கட்டடங்கள், கலையரங்கம் திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. புதிய கட்டடங்களை திறந்து வைத்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, ஜனாதிபதி பேசியதாவது: ஒரு பெண்ணுக்கு, நாம் கல்வி கற்றுக் கொடுத்தால், இரண்டு குடும்பங்கள் பயன் பெறும்.ஒரு பெண் கல்வி கற்றால், அவரது பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன், திருமணமாகி செல்லும் போது, கணவர் வீட்டாருக்கும் உதவியாக இருப்பார். பொருளாதார வளர்ச்சிக்கும், பெண்கள் உதவியாக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

உயர் கல்வி கற்போர் தமிழகத்தில் அதிகரிப்பு :

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழக அரசு, 2011ல், உயர் கல்வித் துறைக்கு, 1,737 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2017 - 18ல், 3,680 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 4,620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான், மிக அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் சேர்க்கையிலும், கல்வி தரத்திலும், தமிழகம் முன்னிலையில் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், தமிழகம் முந்தி வருகிறது. தமிழகத்தில், உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக மாணவர்கள், உயர் கல்வி கற்பதுடன், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். பட்டம் என்பது வேலைவாய்ப்பிற்கான சாதாரண காகிதம் என, நினைத்து விடாதீர். இது, சரித்திர ஆவணம். சமூகத்திற்கு, உங்களுடைய பங்களிப்பை உயர்த்தி காட்டும் ஆதாரம்.இவ்வாறு அவர் பேசினார்.

552 பேருக்கு பட்டம்! :

சென்னை பல்கலை, 160வது பட்டமளிப்பு விழாவில், 582 பேர் நேரடியாக பட்டம் பெறறனர். இவர்களில், கல்பனா, தமிழ்செல்வி ஆகியோர், டி.லிட்., பட்டம் பெற்றனர். 410 பேர், முனைவர் பட்டம் பெற்றனர். 170 பேர், பரிசு மற்றும் தனிச் சிறப்புடன் முதல் நிலை தகுதி சான்றிதழ் பெற்றனர். நேரில் வராத நிலையில், 77 ஆயிரத்து, 350 பேர், பட்டம் பெற்றனர். தஞ்சை எஸ்.பி.,க்கு டாக்டர் பட்டம்தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி., செந்தில் குமாருக்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இவர், 'காலந்தோறும் கருப்பர் நகரம்' என்ற தலைப்பில், மதராசபட்டினம், சென்னையாக மாறிய கதையை ஆய்வு செய்து, ஆங்கிலேயர் ஆட்சி துவக்கம், கோட்டை உருவான கதை, நிர்வாகம், மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை, புகழ்பெற்ற சின்னங்களின் சரித்திரம், சென்னை, வால்டாக்ஸ் ரோடு, ஏழு கிணறு, ஆர்மீனியர் தெரு என, பல வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.இவர், சென்னை, பூக்கடை பகுதியில், மூன்று ஆண்டுகள், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024