Sunday, May 6, 2018

கட்டணத்தை திரும்ப தராத கல்லூரிகள் மீது நடவடிக்கை

Added : மே 06, 2018 02:41

புதுடில்லி:ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து விலகி, வேறொரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்களின் கட்டணத்தை திரும்பத் தராத உயர் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மத்திய மனித வள மேம்பாட்டுதுறை உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வி பயிலும் மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் கட்டணம் செலுத்தி சேர்ந்த பின், வேறொரு கல்வி நிறுவனத்தில், அவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைத்தால், அங்கு இடம் மாற விரும்புவது வழக்கம்.

அப்படிப்பட்ட நேரங்களில், அவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை திரும்பத் தர இயலாது என, பல உயர் கல்வி நிறுவனங்கள் கூறி வருகின்றன.
பெரும் தொகை

இதனால், மாணவர்களும், வேறு வழியின்றி, ஏற்கனவே செலுத்திய பெரும் தொகையை இழந்து, வேறு கல்வி நிறுனத்திற்கு மாறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.சிலர், வேறு வழியின்றி, அதே கல்வி நிறுவனத்தில் தொடருகின்றனர். கட்டணத்தை திரும்பத் தர மறுக்கும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்திந்திய தொழிற்கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானியக் குழு ஆகியவற்றுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வேறு கல்வி நிறுவனத்துக்கு மாற விரும்பும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சில உயர் கல்வி நிறுவனங்கள், பெரும் தொகையை அபராதமாக பிடித்து, மீதி தொகையை திரும்ப தருகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும்.
கண்டிக்கத்தக்கது

மாணவர்கள், தாங்கள் விருப்பப்பட்ட பாடத்திலோ அல்லது கல்வி நிறுவனத்திலோ சேரும் உரிமையை பறிக்கும் இது போன்ற செயல் கண்டிக்கத் தக்கது. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் உயர் கல்வி நிறுவனங்களின் அனுமதி மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024