Saturday, May 5, 2018

`டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத இருந்த இடம், நீட் தேர்வுக்கு இல்லையா..?' - தலைவர்கள் கேள்வி
MUTHUKRISHNAN S


vikatan  



நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் சீட் ஒதுக்கி இருப்பது கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ அலுவலகத்தையே முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும், அவர்களிடம் இருந்து எந்த பலனும் இல்லை; சரியான பதிலும் இல்லை. நேற்று முன் தினம், '' ஒரே நேரத்தில் 12 லட்சம் பேர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வசதிகள் இருக்கும் தமிழ்நாட்டில் லட்சம் பேர் நீட் தேர்வு எழுத மையங்களை அமைக்க முடியாதா?'' என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பி இருந்தார். இந்தக் கருத்து வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சுனில் ராஜா நம்மிடம் கூறுகையில், ''தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வெழுத கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இடம் ஒதுக்கீடு செய்தது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு, பி.ஜே.பி-யை சேர்ந்த தமிழகத் தலைவர்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். ரூ.1,000 ரொக்க பணமும் ரயில் அல்லது பஸ் கட்டணம் திருப்பி தரப்படும் என்று தேர்வுக்கு முந்தைய நாள் அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இது தேர்வெழுதும் மாணவர்களுக்கு நிச்சயமாக பயன்படப்போவதில்லை.

ஏனென்றால், இது கோடை விடுமுறை காலம். அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த அவரச கதியில் ராஜஸ்தான் செல்வது எப்படி? விமான வசதி செய்து கொடுப்பார்களா? கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்ல பல பஸ்களை பிடித்துத்தான் போக வேண்டும். வெளிமாநிலங்களில் தங்கும் செலவு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாயாவது ஆகும். சாப்பாடு, உள்ளூர் செலவு எல்லாம் இன்னும் இருக்கிறது. இதைப்பற்றி ஆட்சியாளர்களும் சி.பி.எஸ்.இ நிர்வாகிகளும் யோசித்தார்களா? தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த பிரச்னைகள் எல்லாம் கூடுதல் சுமையாக ஆகி விட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வை தமிழகத்தில் எழுத விண்ணபித்தவர்களில், சுமார் 5,000 பேருக்கு மேல், இங்கு இடமில்லை என்று வேறு மாநிலத்துக்கு மாற்றி இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 போட்டித்தேர்வை 6 ஆயிரத்து 962 மையங்களில் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரத்து 894 பேர் தேர்வு எழுதினர். ஆனால்,இப்போது நீட் தேர்வெழுத தமிழ்நாடு முழுவதும் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேருக்கு தேர்வு எழுத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத இருந்த இடம் இப்போது நீட் தேர்வுக்கு இல்லையா?



சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 100 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் கோவை பகுதியில் 80 சி.பி.எஸ்.இ பள்ளிகளும் என்று தமிழகம் முழுவதும் 580 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. இவற்றில் 250 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இங்கெல்லம் தேர்வு மையம் போட்டிருந்தாலே தமிழக மாணவர்கள், தமிழகத்திலேயே தேர்வெழுதி இருக்க முடியும். இன்னும், தமிழக அரசு பள்ளிகளை நாடி இருந்தால் பல லட்சம் பேர் தேர்வெழுத கூடுதல் இடம் கிடைத்திருக்கும். ஆனால், இடமில்லை என்று பொத்தம் பொதுவாக சி.பி.எஸ்.இ சொல்லும் காரணம் காமெடியாக உள்ளது. எதற்கெடுத்தாலும், டிஜிட்டல் இந்தியா சர்க்கார் என்று சொல்லும் மத்திய அரசு, இதற்காக வெட்கப்பட வேண்டும். கடந்த பிப்ரவரியில் 17 லட்சம் பேர் குரூப்-4 தேர்வெழுத ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் உதவியை கேட்டிருந்தாலே தேர்வு மையம் அமைக்க தேவையான உதவிகளை வழங்கி இருப்பார்கள்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024