Monday, May 21, 2018

தலையங்கம்

இனி சகோதரத்துவம் தழைக்கட்டும்





காவிரி நீர் பிரச்சினை என்பது கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போது ஏற்பட்டதல்ல. சென்னை மாகாணம், மைசூரு மாகாணம் என்று இருந்த காலக்கட்டத்தில் அதாவது, 1807–ம் ஆண்டிற்கு முன்பே இருந்து வந்தது.

மே 21 2018, 03:00

காவிரி நீர் பிரச்சினை என்பது கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இப்போது ஏற்பட்டதல்ல. சென்னை மாகாணம், மைசூரு மாகாணம் என்று இருந்த காலக்கட்டத்தில் அதாவது, 1807–ம் ஆண்டிற்கு முன்பே இருந்து வந்தது. காவிரியில் அணைக்கட்ட இரு மாநிலங்களும் திட்டமிட்ட நேரத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. இரு மாகாண நிர்வாகங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் தொடர்ச்சியாக 18–2–1892 அன்று ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுதான் காவிரி நீர் பிரச்சினைக்கு போடப்பட்ட முதல் ஒப்பந்தம். தொடர்ந்து 1924–ல் இரண்டாம் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்பு 1990–ம் ஆண்டு நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு, 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந் தேதி நடுவர்மன்றம் தீர்ப்பை வழங்கியது. ஆனால் நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக தாமதப்படுத்தியது.

2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29–ந் தேதிதான் நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் கர்நாடக மாநிலம் நடுவர்மன்ற தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அப்போதிலிருந்தே சகோதர மாநிலங்களான கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருந்துவந்தன. சுப்ரீம் கோர்ட்டின் கதவுகள் தட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் சில திருத்தங்களை செய்து, அதன் தொடர்ச்சியாக ஒரு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இதன்படி, 10 உறுப்பினர்களைக் கொண்ட ‘‘காவிரி மேலாண்மை ஆணையம்’’ அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் தலைமையகம் டெல்லியில் இருக்கும். காவிரி ஒழுங்காற்று குழு பெங்களூருவில் அமைக்கப்படும். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளில் ஏதேனும் ஒன்று ஆணையத்தின் உத்தரவுக்கு உட்படவில்லையெனில் ஆணையம், மத்திய அரசின் உதவியை நாடலாம். இந்த ஆணையம் தொடர்பாக இதுதான் இறுதி தீர்ப்பு. இனிமேல் வேறெந்த வழக்கும் தொடரமுடியாது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, மத்திய அரசாங்கம் இந்த வரைவு செயல்திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு, ஆணையத்தை தொடங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆக, அடுத்த 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் இந்த தீர்ப்பு நிறையோ, குறையோ, 4 மாநிலங்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டிற்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், வழக்கமாக ஜூன் 1–ந் தேதியோ அல்லது தாமதமாகவோ தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு மே 29–ந் தேதியே தொடங்குகிறது என்பதுதான். ஆக, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, இந்த மாதம் 29–ந் தேதிக்குள் மத்திய அரசாங்கம் இந்த வரைவு செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட வேண்டும். இவ்வளவு நாட்களும் இந்த மாநிலங்களிடையே காவிரி பிரச்சினையால் இருந்த கசப்புணர்வு போகட்டும். இனிமேல் ‘காவிரி அன்னையின் மடியிலுள்ள கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மக்களிடையே சகோதரத்துவம் தழைக்கட்டும்.

No comments:

Post a Comment

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’ Wrong number: The callers wanted to have a word with  Sai Pallavi or comp...