Wednesday, May 16, 2018

கர்நாடகாவில் யார் ஆட்சி... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? சட்டத்தின் பார்வையும்... அரசியல் பார்வையும்....!

கர்நாடகாவில் யார் ஆட்சி... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? சட்டத்தின் பார்வையும்... அரசியல் பார்வையும்....!
`காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைப்போம்' எனச்சொல்லி வரும் பாரதிய ஜனதா கட்சியால், தென்னிந்தியாவில் நுழைவதற்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாயிலாகப் பார்க்கப்பட்டது கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல். அதேபோல் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, தன் கைவசம் இருக்கும் 4 மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்தது காங்கிரஸ்.

இப்படி பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வென்றிருக்கிறது பி.ஜே.பி. ஆனாலும் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க பி.ஜே.பி.க்கு இன்னும் 9 எம்.எல்.ஏ-க்கள் தேவை. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றிருக்கிறது. எதிர்பாராத திருப்பமாக காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் சேர்ந்திருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக ஆதரவு கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

104 தொகுதிகளை வென்ற பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 78 பேரின் ஆதரவோடு 115 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமியும் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச்  சூழலில் ஆளுநர் யாரை அழைக்கப்போகிறார் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அடிப்படையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ- க்கள் ஆதரவு பெற்றுள்ள குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியாக 104 எம்.எல்.ஏ. ஆதரவு கொண்ட பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

``குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும்," என காங்கிரஸ் தரப்பும், தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பி.ஜே.பி.யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென பி.ஜே.பி. தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இந்நிலையில், எடியூரப்பாவை சட்டமன்ற கட்சித் தலைவராக பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்துள்ளனர். அவர் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ள நிலையில், எடியூரப்பாவை ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சியமைக்க அழைப்பார் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் அளிக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. இது சட்டத்துக்குப் புறம்பானது, குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
முதலமைச்சரைத் தேர்வு செய்யும் போது ஆளுநர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து சர்க்காரியா கமிஷன் பரிந்துரை மற்றும் பொம்மை வழக்கு தீர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்கட்டும் அரசியல் நோக்கர்கள், அதை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.

``சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையான பலம் இல்லாத சூழலில், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைத்த கட்சிகளின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய முன்னுரிமை தர வேண்டும். இரண்டாவதாக மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வரும் அதிக இடங்களில் வென்ற கட்சியின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும். மூன்றாவதாகத் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் சார்பில் அனைவரும் ஆட்சியில் பங்கேற்கும் நிலையில் முதல்வரை நியமிக்க வேண்டும். இப்படி முன்னுரிமை வரிசையில் முதல்வரைத் தேர்வு செய்யும் போதே யாரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியுடையவராக ஆளுநர் இருக்க வேண்டும்," எனப் பரிந்துரைக்கிறது சர்க்காரியா கமிஷன்.

அதன்படி தற்போதைய சூழலில் 104 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட பி.ஜே.பி.யை வேறு கட்சிகள் ஆதரிக்கவில்லை. இந்தச் சூழலில் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் நிலையில், அந்த ஆட்சி நிலையாக இருக்குமா என்பதை ஆளுநர் தன்னளவில் திருப்தியடைய வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், யார் ஆதரவும் இல்லாமல் 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைப்பது என்பது, மற்ற கட்சிகளை உடைக்கவும், நேரடியான குதிரை பேரத்துக்கும் வழிவகுக்கும். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவில்லாத ஒருவரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது பெரும் சர்ச்சைகளுக்கே முன்வைக்கும்.
இந்தச் சூழலில் ஆளுநர் எடுக்கும் முடிவு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விவகாரத்தை அரசியல் பார்வையோடு அணுகாமல், சட்டத்தின் பார்வையில் அணுக வேண்டியது மிக அவசியம். ஒருவேளை பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைத்தால், தங்களுக்குத் தேவையான 9 எம்.எல்.ஏ-க்களை வேறு கட்சியிலிருந்து இழுக்க பி.ஜே.பி. முற்படும். இது கட்சித்தாவல் மற்றும் நேரடி குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். எந்தக் கட்சியும் பி.ஜே.பி.க்கு ஆதரவளிக்கவில்லை. கட்சியை உடைப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பும் பி.ஜே.பி.க்கு இல்லை. 

கர்நாடகாவில் தற்போது குதிரைப் பேரம் தொடங்கியிருப்பதை தற்போதைய சூழல் உறுதிப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்கள் தங்களை ஆதரிப்பார்கள் என வெளிப்படையாகவே பேசத்தொடங்கியிருக்கிறார்கள் பி.ஜே.பி. நிர்வாகிகள். இதேபோல் இருதரப்பிலும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

`கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சிதான் அமையும். எடியூரப்பாவையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார்' என்ற பேச்சும் பரவலாக எழுகிறது. சட்டத்தின் பார்வையை விட அரசியல் பார்வையோடுதான் ஆளுநர் அணுகுவார் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது. சில மாதங்களில் நடக்கும் 3 மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது பி.ஜே.பி.க்கு அவசியம் என்பதால், பி.ஜே.பி.க்கு ஆதரவான முடிவையே ஆளுநர் எடுப்பார் என்ற பேச்சு பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

`பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்' என்ற முடிவுடன் குமாரசாமிக்கு ஆதரவளித்திருக்கிறது காங்கிரஸ். `எப்படியேனும் தென்னகத்தில் மீண்டும் கால்பதிக்க வேண்டும்' என்ற முடிவுடன் தீவிரம் காட்டுகிறது பி.ஜே.பி. கர்நாடகாவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள். ஆளுநர் கையில் இருக்கிறது முடிவு.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...