`நான் எக்ஸாம் எழுதின பேனாகூட வேற ஒருத்தருது!' -
வறுமையிலும் 1060 எடுத்த திவ்யா
பள்ளிச் சீருடை, புத்தகம் எடுத்துச் செல்லத் தேவையான பை, பரீட்சைக்கான பேனா... இப்படி எதுவுமே இல்லையென்றாலும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி திவ்யா.
படித்தது அரசுப் பள்ளி, எடுத்தது 1060 மார்க்... ``எதையாவது சாதிக்கணும்னு மட்டும்தான்கா என் மனசுல ஓடிட்டு இருந்தது. இப்ப செஞ்சுட்டேன் நினைக்கிறேன். ஆனா அடுத்தது...'' என்கிறவருக்கு தொண்டை அடைக்கிறது.
``ஒரு நாளைல மூணு வேள நல்ல சாப்பாடு கெடைச்சா அதை நாங்க கடவுள் கொடுத்த வரம்னு நினைச்சுப்போம்கா. இந்தச் சூழலுக்கு கடவுளை குத்தம் சொல்ல முடியாது. எங்க அப்பா அம்மாவோட அறியாமைதான் காரணம். வீட்ல என்னையும் சேர்த்து ஆறு பொண்ணுங்க, ஒரு பையன். இத்தனை பேருக்கும் சாப்பாடு போடுறதுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப்படணும்னு நினைச்சுப் பாருங்க. அப்பாவுக்குக் கூலி வேலை. அவருக்கு எல்லா நாளும் வேலை இருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. பொழுது விடிஞ்சா அன்னைக்கு என்ன வேலை, யார் கொடுப்பாங்னு அப்பாவும் அம்மாவும் காத்திருப்பாங்க. அம்மா எங்களுக்காக 18 மணி நேரமெல்லாம் வேலை செய்ஞ்சிருக்காங்க.
இதெல்லாம் தாண்டி எங்களையெல்லாம் படிக்க வைக்கணும்ங்கிறதெல்லாம் நெனைச்சே பார்க்க முடியாத விஷயம். நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிக்குறேன். அதுக்குக் காரணம் எங்கம்மா. நானும் வறுமையில படிக்காம போயிடக் கூடாதுனு என்னை கவர்ன்மென்டு ஸ்கூல்ல படிக்க வெக்கிறாங்க. பத்தாம் வகுப்புல நல்ல மார்க் எடுத்தேன். அதுக்குப் பிறகு `நானும் பாத்திரம் தேய்க்க வரட்டுமா'னு அம்மாகிட்ட கேட்டேன். `என் நிலைமை உனக்கு வரக் கூடாது'னு அம்மா சொன்னதால மறுபடியும் படிக்கப் போனேன். ஆனாலும் மனசு கேட்கலைக்கா. அம்மாவுக்கு உதவி செய்றதுக்காக எங்க தெருவுல உள்ள சில வீடுங்களுக்கு நானும் பாத்திரம் தேய்க்க, வீடு கூட்ட போயிட்டு இருக்கேன்.
அதுல கிடைக்கிற பணத்தை வெச்சு என் தம்பி, தங்கச்சிங்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை வாங்கிக் கொடுக்கிறேன். சில நேரம் வீட்டு வேலையெல்லாம் முடிச்சு ஸ்கூலுக்குப் போக லேட் ஆயிரும். அப்படி லேட்டா போறப்ப கிளாசுக்கு வெளிய நிக்க வெச்சிருவாங்க. என்ன பண்றது என் கஷ்டம் அவங்களுக்கு தெரியாதில்லையா... சகிச்சுப்பேன். வெளிய நின்னபடியே பாடத்த கவனிப்பேன். இதுவரைக்கும் டியூசன் பக்கமெல்லாம் எட்டிப் பார்த்ததில்லைக்கா. பாத்திரம் தேய்க்கிற வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போக ஏழு மணி ஆகிடும். அதுகப்புறம் உக்காந்து பத்து மணி வரைக்கும் படிப்பேன். நாங்க இருக்கிறது ஒரே ஒரு ரூமு. அதுல ரொம்ப நேரம் படிச்சா மத்தவங்க தூங்க முடியாதில்லையா... அதனால சீக்கிரம் தூங்கிடுவேன்.
போன வருஷம் வெள்ளம் வந்தப்ப எங்களோட ஒத்த ரூமுல இருந்த அத்தனை பொருளும் தண்ணியில அடிச்சுட்டுப் போயிருச்சு. புத்தகமெல்லாம் நனைஞ்சு போயிருச்சு. நடுத்தெருவுல நின்னோம். தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் போய் உதவி கேட்டேன். அவங்க செஞ்ச உதவியினாலதான் படிக்கவே முடிஞ்சது. அதையெல்லாம் நினைச்சா கண்ணீரை அடக்க முடியலக்கா. கடவுள் எங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தார்... ஆனா அதோட சேர்த்து எனக்கு மனபலத்தையும் கொடுத்தார்னு நம்புறேன். சொன்னா நம்ப மாட்டீங்கக்கா... இந்த வருஷம் நான் பரீட்சை எழுதின பேனாகூட வேற ஒருத்தர் கொடுத்ததுதான். இப்ப அதை என் தம்பி தங்கச்சிங்க பரீட்சை எழுத கொடுத்திருக்கேன்.
பேனாவுக்கே நான் மத்தங்களை எதிர்பார்க்குற நிலைமையில காலேஜ் எல்லாம் எனக்குக் கனவா தெரியுது. அழுகையா வருதுக்கா'' என்ற திவ்யா அழ ஆரம்பித்துவிட்டாள்.
No comments:
Post a Comment