போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.8 கோடி நஷ்டம்
dinamalar 18.05.2018
சென்னை: தமிழக அரசு, டீசல் மானியத்தை ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடுகின்றன.
ஊழியர்கள் ஊதிய உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், அரசு போக்குவரத்து கழகங்கள் திண்டாடின. இதற்கு தீர்வு காண, இந்தாண்டு ஜனவரியில், பஸ் கட்டணத்தை, 60 சதவீதம் வரை, தமிழக அரசு உயர்த்தியது.தினமும், இரண்டு கோடி பேர் பயணம் செய்த நிலையில், தற்போது, 30 லட்சம் பேர், பஸ் பயணத்தை தவிர்த்துள்ளனர். பஸ் கட்டண உயர்வால், பெரிதாக வருவாய் உயர்வு ஏற்படவில்லை; 10 சதவீதமே வசூல் கூடியுள்ளது.
எதிர்பார்த்த வருவாய் இல்லாததோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தியதால், 2011 முதல் வழங்கி வந்த டீசல் மானியத்தை, தமிழக அரசு ரத்து செய்து உள்ளது.
இதனால், அரசு போக்கு வரத்து கழகங்கள் தள்ளாடி வருகின்றன. போக்கு வரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசு போக்கு வரத்து கழகத்தில், ஒவ்வொரு நாளும், 30 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. ஐந்து மாதங்களில் டீசல் விலை,லிட்டருக்கு, 15 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
செலவு அதிகரித்து வரும் நிலையில், டீசல் மானியத்தை அரசு ரத்து செய்ததால், தினமும், எட்டு கோடி ரூபாய் வரை, நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் மானியத்தை அரசு மீண்டும் தர வேண்டும்; இல்லாவிட்டால், அரசு போக்குவரத்து கழகங்கள், பஸ்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பஸ் ஊழியர்களுக்கு நிலுவை ரூ.7,000 கோடியாக உயர்வு
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை, மீண்டும், 7,000 கோடி ரூபாயை எட்டிஉள்ளதால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைக்காக, குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அவற்றை, உரிய வங்கிக்
கணக்கில் செலுத்தாமல், மற்ற நிர்வாக செலவுகளுக்கு செலவிடப்படுகிறது.
இந்த வகையில், 7,000 கோடி ரூபாய் நிலுவை இருந்ததால், அவற்றை அரசு வழங்கக் கோரி, தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து,ரூ. 2,054 கோடி தமிழக அரசு வழங்கியது. அதனால், நிலுவை தொகை, 5,000 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. தற்போது, நிலுவைத் தொகை, மீண்டும் பழைய நிலையான, ரூ.7,000 கோடி எட்டியுள்ளது.
இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட நிலுவைத் தொகையை, உரிய கணக்கு களில் செலுத்த வேண்டும்; இல்லையேல், மீண்டும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
No comments:
Post a Comment