Friday, May 18, 2018

அவசர சிகிச்சை ஊக்க மதிப்பெண் இல்லை: ஐகோர்ட் உத்தரவு

Added : மே 17, 2018 23:04

சென்னை, அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, முதுநிலை படிப்புக்கான ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ முதுநிலை படிப்புக்கான சேர்க்கையின் போது, தொலைதுாரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, 10 முதல், 30 சதவீதம் வரை, ஊக்க மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.இதில், தொலைதுாரம், செல்ல முடியாத பகுதி, கடினமான பகுதி எது என்பதை வரையறை செய்து, மார்ச், 23ல், தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.இதில், உண்மையிலேயே தொலைதுாரப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, பலன் கிடைக்கவில்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பிரவீன், மகேஷ், ரமேஷ்குமார் உட்பட சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசு பிறப்பித்த ஆணையை, ரத்து செய்து உத்தரவிட்டார்.தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், அரசு வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆஜராகினர். மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தொலைதுார பகுதிகள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் பணியாற்றும், அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை படிப்பில் சேர்வதற்கான ஊக்க மதிப்பெண் வழங்கும் விதிகள் செல்லும்.மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைப் பிரிவுகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், இந்த ஊக்க மதிப்பெண்களை பெற முடியாது. இந்த சலுகை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையில், குறிப்பிட்ட இந்தப் பகுதியை மட்டும் ரத்து செய்கிறோம்.எதிர்காலத்தில், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஊக்க மதிப்பெண் வழங்கும் பகுதிகளை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...