Sunday, May 20, 2018

போதைக்காக மருந்துகளைக் கொள்ளையடிக்கும் இளைஞர்கள்! சி.சி. டி.வி. காட்சிகள்! 

20.05.2018  vikatan
JAYAVEL B

போதைக்காக மருந்துகளைக் கொள்ளையடிக்கும் இளைஞர்களால், பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் செங்கல்பட்டு பகுதி மருந்துக் கடை உரிமையாளர்கள்! இவ்விஷயத்தில், ஏற்கெனவே கோவையில் ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவங்களைப் போன்று தமிழகமெங்கும், பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறத் தொடங்கிவிட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ளது சிங்கபெருமாள் கோயில். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் மெட்ப்ளஸ் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று இந்த மருந்தகத்துக்கு வந்த இரண்டு இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட மருந்தினைக் கேட்டு அந்த மெடிக்கலில் உள்ள ஊழியரான மாரிமுத்து என்பவரைத் தொந்தரவு செய்திருக்கிறார்கள். போதைக்காகத்தான் அந்த குறிப்பிட்ட மருந்தை இளைஞர்கள் கேட்கிறார்கள் என்பதை யூகித்துக்கொண்ட மாரிமுத்து, ‘'மருத்துவரின் அனுமதி இல்லாமல், அந்த மருந்தைக் கொடுக்கமாட்டோம். தற்போது அந்த மருந்து இருப்பு இல்லை.'' எனத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் அந்த மருந்துக்கடை உள்ளே நுழைந்து மாரிமுத்துவை தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மெடிக்கலுக்குள் நுழைந்து அந்தக் குறிப்பிட்ட மருந்தை எடுத்துத்தரச் சொல்லி கடுமையாகத் தாக்குவதும், அதில் ஒருவர் டேபிளில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மாரிமுத்துவின் கையில் குத்திக் கொலை மிரட்டல் விடுப்பதும் அந்த சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. ‘என்னை விட்டுடுங்கண்ணா…’ என கடை ஊழியர் போதை இளைஞரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மாரிமுத்துவை அடித்து மிரட்டுகிறார்கள். இதைத் தொடர்ந்து தொலைபேசி ரிசீவரை எடுத்து மாரிமுத்துவின் தலையில் சரமாரியாகத் தாக்குகிறார் ஓர் இளைஞர். மற்றொரு இளைஞரோ மருந்துக் கடையில், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துகளில் தான் தேடிவந்த குறிப்பிட்ட மருந்து இருக்கிறதா எனப் பதற்றத்துடன் தேடுகிறார். பின்னர் மருந்துக் கடையிலிருந்து சில மருந்துகளை எடுத்து தனது இடுப்பில் மறைத்து வைத்துக்கொள்கிறார். இவையனைத்தும் சி.சி.டி.வி காட்சியில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மெட்ப்ளஸ் மெடிக்கல் உரிமையாளர் பிரதீபாவிடம் பேசினோம். “மெடிக்கலில் அந்தக் குறிப்பிட்ட மருந்தைத் தேடிவந்த இளைஞர்கள், எங்கள் ஊழியரைத் தாக்கியதோடு அந்த மருந்தினையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். மேலும் கடையிலிருந்து 33 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கொண்டு சென்ற மாத்திரைகளை இரவில் ஒன்று மட்டுமே எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். டாக்டரின் பரிந்துரையோடு வரும் வாடிக்கையாளர்களேகூட எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் நாங்கள் பத்து மாத்திரைக்கு மேல் கொடுக்கமாட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன் சில இளைஞர்கள் அந்தக் குறிப்பிட்ட மருந்தைக் கேட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை. அடுத்த நாளே அந்த இளைஞர்கள் மீண்டும் எங்கள் கடைக்கு வந்து அந்த மருந்தைக் கேட்டு தொந்தரவு செய்தார்கள். நாங்கள் இல்லை என்று சொன்னதுடன், அவர்கள் சென்றபிறகு எங்கள் ஆட்களைவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்தோம். மாமண்டூர் பகுதிவரை சென்ற அந்த மர்ம நபர்களின் பைக் எண்ணைக் குறிப்பிட்டு காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தோம். ஆனால், காவல்நிலையத்தில் 'அது வேறு யாராவது இருக்கும்...' எனச் சாதாரணமாகச் சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயமாக இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் உள்ள மெட்ப்ளஸ் மெடிக்கலிலும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. பணம், மொபைல் போன்றவற்றையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். தேனாம்பேட்டையில் நடந்த சம்பவத்துக்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இங்கே நாங்கள் வற்புறுத்திக் கேட்டபிறகுதான் சி.எஸ்.ஆர் போட்டுள்ளார்கள்'' என்றார் தீராத பயத்துடன்.



இதுகுறித்து மறைமலைநகர் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகனிடம் பேசியபோது, “இரு தினங்களுக்கு முன்பே நாங்கள் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகிறோம். கல்லூரி மாணவர்களா, வேலையின்றி சுற்றித்திரியும் இளைஞர்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம். அவர்கள் இந்தச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனச் சந்தேகிக்கிறோம். விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோம்” என்றார்.

No comments:

Post a Comment

Fast Track Immigration from Jan. 2025 at Chennai airport

Fast Track Immigration from Jan. 2025 at Chennai airport Hassle-free travel: To avail the facility, registered passengers need to scan their...