Saturday, May 5, 2018

முதுமையைப் போற்றுவோம்!

By ச. முத்துக்குமார்  |   Published on : 04th May 2018 01:39 AM  | 
மனிதர்கள் தவிர்க்க நினைப்பதும், தள்ளிப்போட முடியாத விஷயமாகவும் உள்ளது முதுமை. குழந்தையாக பிறந்து முதுமையில் இறப்பது இயற்கையின் நியதியாக உள்ளபோதிலும், முதுமைப் பருவம் என்பது எளிதில் கடந்து செல்லக் கூடியதல்ல. மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய பருவத்தில் இருக்கும் முதியவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை காது கொடுத்துக் கூட கேட்காத சூழலில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். 
முதியவர்களின் அனுபவம் நமக்குப் பல்வேறு விஷயங்களில் கை கொடுத்தபோதிலும் அவர்களுக்கு கை கொடுத்து உதவி செய்யவும் நம்மில் பலர் தயாராக இல்லை. அவ்வாறான முதிய பருவத்தில் அவர்கள் என்னவிதமான வேதனைகள், மனத் துன்பங்களை இன்றைய சமூகத்தில் பெறுகின்றனர் என்பதை ஓர் ஆய்வின் முடிவு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடலூரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் சென்னை, புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, புவனேசுவரம், குவாஹாட்டி, ஹைதராபாத், லக்னௌ, ஷில்லாங் உள்ளிட்ட 19 நகரங்களில் 4,615 முதியோர்களை சந்தித்துப் பேட்டி கண்டுள்ளது. இதில் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 53% பேர் தங்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், 61 சதவீதத்தினர் தங்களின் பொறுமையான செயல்பாட்டால் சமூகம் தங்களை புறக்கணிப்பதாகவும், 52 சதவீதத்தினர் தங்களிடம் மக்கள் அதிக கடுமையாக நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். வாகனங்களை பொதுமக்கள் அலட்சியமாக பயன்படுத்துவதால் தங்களுக்கு சாலை விபத்துகள் தங்களுக்கு நேர்வதாக 38சதவீதத்தினரும், இதன் காரணமாகவே 42 சதவீதத்தினர் தங்களது வீட்டைவிட்டே வெளியே வர தயங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைக் கொண்டு ஆராய்ந்தால், நவீன சமூகத்தை முதியோர் மிரட்சியுடனே அணுகுகிறார்களா அல்லது முதியவர்களை அலட்சியத்துடன் இளைய தலைமுறை அணுகுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.
சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்தவர்கள் தற்போது தங்களது கால் தடத்தை சாலையில் பதிக்கவே அச்சப்படும் சூழல் உள்ளது. இன்றைய பரபரப்பான வாழ்வில் அனைத்துக்கும் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கும் நிலையில், தங்களின் உடல் இயலாமையால் மெதுவாக நடந்து செல்லும் ஒருவரைக் காணும் போது ஒருவிதமான கோபம் ஏற்படுவது இயற்கையானதுதான். 
ஆனால், ஓடிக்கொண்டே இருக்கும் நாமும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க முடியுமா? இந்தக் கேள்வியை மனதில் கொண்டு, முதியவர்களை நோக்கினால் அங்கே நமது முதிய உருவத்தை காணலாம். அவர்கள் மீது கருணை மழையைப் பொழிய வேண்டியதில்லை. ஆனால், நாமும் இதே தள்ளாமையை கண்டிப்பாக அடைவோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களின் வலியும், வேதனையும் புரியும்.
முதியோர் என்போர் ஒன்றுக்கும் முடியாதவர்கள் அல்ல. இந்த சமுதாயத்துக்கு தங்களது உடல் உழைப்பை வழங்கிவிட்டு, இப்போது தங்களது அனுபவத்தையும், அறிவையும் வழங்கத் தயாராக நமக்காக காத்திருப்பவர்களே முதியவர்கள். தங்களது அனுபவத்தை வளரும் தலைமுறையினர் பகிர்ந்து கொண்டு, அதன் மூலமாக அவர்கள் முன்னேற்றமடைய வேண்டுமென்ற எண்ணத்துடனே தங்களது அனுபவங்களை பிறருக்கு பகிர்கிறார்கள். 
முதுநெல்லியும், முதியவர்களின் பேச்சும் கசக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, அவர்களது பேச்சை இன்று காது கொடுத்து கேட்காததால், நெல்லிக்காயை சுவைத்த பின்னர் கிடைக்கும் இனிப்பை புறக்கணிக்கிறோம் என்றே கொள்ள வேண்டும்.
வாழ்வின் கடைசிப் பருவத்தில் இருக்கும் முதியவர்களுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளையும் யாரும் காட்டுவதில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்களில் முதியவர்கள் எளிதில் சென்று வரும் வகையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது. பேருந்தில் முதியவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டைக் கூட அவர்களால் பெற முடியாத நிலையே உள்ளது. 
முதியவர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் எவ்வளவு பெரிய பிரச்னையையும் சர்வ சாதாரணமாக கையாண்டு, அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு, அதனையே சாதனையாக மாற்றுவதை நமது வாழ்வில் பல்வேறு கட்டங்களில் பார்த்து உணர்ந்திருப்போம். அவர்கள் அந்தக் குடும்பத்தின் அறிவு பொக்கிஷமாக இருந்து தங்களது அனுபவங்கள் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு காண்கின்றனர். 
தற்போது இளைய வயதினரை அதிகமாகக் கொண்ட நாடாக விளங்கிவரும் இந்தியா, முதியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அதை தங்களது செயல் திட்டத்தில் இணைத்து பணியாற்றினால் வியத்தகு வெற்றிகளைப் பெறலாம். 
பொது வெளியில் அவர்களது இயலாமையை விமர்சிக்கும் வகையிலான நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். உதவியை நாட விரும்பாத அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் இளைய தலைமுறையினருக்கு உள்ளது.
சமுதாயத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதியவர்களை ஒதுக்கிவிட்டு எந்த சாதனையையும் யாராலும் நிகழ்த்த முடியாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024