Saturday, May 5, 2018

வெளி மாநிலங்களில் நீட் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா?


neet_answer

சென்னை: தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே, நீட் தேர்வால், மருத்துவம் படிக்கும் கனவோடு இருந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால், ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு முன்தினம் படிக்க முடியாமல், வெளி மாநிலத்துக்கு பயணம் செய்து, அங்கு மொழி தெரியாமல், தங்கும் வழி தெரியாமல் அலைய நேரிடுமே என்ற கவலையில் ஆழ்ந்திருந்தனர். பண வசதி இல்லாத ஏழை மாணவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது போயினர்.
வெளி மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதால் வெறும் அலைச்சல், பணச் செலவு, மன உளைச்சல் என பல சிக்கல்கள் எழுந்தாலும், அதோடு பிரச்னை முடியவில்லை என்கிறது மேலதிகத் தகவல்கள்.
அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வெளி மாநிலங்களில் இருக்கும் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒரியா, தமிழ், தெலுங்கு, உருது மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்தி மற்றும் உருது ஆகிய உள்ளூர் மொழிகளைத் தவிர மற்ற மொழிகளில் வினாத்தாள்கள் அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே வழங்கப்படும்.
இதில் சிக்கல் என்னவென்றால், தமிழ் வினாத்தான் தமிழத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும்தான் வழங்கப்படும். எனவே, வெளி மாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா? என்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை. 
எனவே, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் தேர்வை எதிர்கொள்ள கடந்த ஒரு மாத காலத்தில் சிபிஎஸ்இ பாடத்தைப் படித்து தேர்வுக்கு தயாராகி வருவதே மிகப்பெரிய சவால்.
இதில், தெரியாத இடம், புரியாத மொழி என பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி, தேர்விலும் தமிழ் மொழியில் வினாத்தாளை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவ சேர்க்கையையும் கொண்டிருக்கும் தமிழகத்தில் பிறந்த மாணவ, மாணவிகள், மருத்துவ மாணவ சேர்க்கைக்கு அடிப்படையான நீட் தேர்வைக் கூட வெளி மாநிலத்தில் சென்று எழுத வேண்டிய கட்டாயமும், பல தடைகளை சந்திக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
இது தமிழர்கள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகவே பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி, தமிழக மாணவர்களின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துக் சொல்ல தமிழக அரசு சார்பில் எந்த மூத்த வழக்குரைஞரும் நியமிக்கப்படாமலேயே, தமிழக அரசு கண் மூடி மௌனியாய் இருந்துவிட்டது.
அதனால்தான் சிபிஎஸ்இயின் வாதத்தை ஏற்றுக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
மத்திய அரசின் அடக்குமுறைகளை கண்டும் காணாமலும் இருக்கும் மாநில அரசின் நிலையைக் கண்டு மனம் வெதும்பிய ஏராளமான சமூக அமைப்புகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும், வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்தனர். அதனால் வெளி மாநிலம் செல்லும் மாணவர்களில் சிலராவது எளிதாக தேர்வு மையங்களை கண்டடைய வழி ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024