Saturday, May 5, 2018


எர்ணாகுளத்தில் கொட்டித் தீர்க்கும் மழை: நீட் தேர்வுக்குச் சென்ற தமிழக மாணவர்கள் தவிப்பு!

பி.ஆண்டனிராஜ்  VIKATAN 


நீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் சென்றுள்ள நிலையில் அங்கு கோடை மழை கொட்டித் தீர்த்தது. அதனால், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாகச் சென்றவர்கள் தங்குமிடத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.



எம்.பி.பி.எஸ்., பி.டிஎஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனை மாற்ற சி.பி.எஸ்.சி மறுத்துவிட்ட நிலையில், தற்போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்குச் சென்று தங்கியிருக்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சில மாணவர்கள் இன்று பகலில் ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சுமார் 8 மணிநேரப் பயணத்துக்குப் பின்னர், கேரளாவின் எர்ணாகுளம் நகரில் இறங்கிய நிலையில், அங்கு சுமார் ஒரு மணி நேரமாகக் கொட்டித் தீர்க்கும் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்கிற இடமும் தெரியாமல், புரியாத மொழி பேசும் மாநிலத்தில் தவித்து வருகிறார்கள்.

பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் சேவை மையங்களை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அந்த மையத்தில் இருப்பவர்கள் தங்குமிட வசதி உள்ளிட்டவற்றை தெரிவித்த போதிலும், மழையின் காரணமாக அந்த இடத்துக்குச் செல்ல முடியாமல் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மாணவ, மாணவியருடன் பெற்றோரும் உடன் சென்றுள்ள நிலையில் அந்தந்த இடங்களிலேயே அவர்கள் காத்திருக்கிறார்கள்.



அத்துடன், ஞாயிற்றுக் கிழமை காலையில் 7.30 முதல் 8.30 மணிக்குள் ‘ஏ சிலாட்’ மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பி சிலாட்’ மாணவர்கள் 8.30 முதல் 9.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்றுவிட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிப்பட்டுள்ளது. அதனால் நாளை மழை பெய்து விடக் கூடாதே என்கிற கவலையும் கூடுதலாக தமிழக மாணவர்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024