Saturday, May 5, 2018

விருந்தோடு முடிந்த நிர்மலா தேவி விவகாரம்! 

எஸ்.மகேஷ்



அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்துக்குக் கல்லூரி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் விருந்து அளித்துள்ளது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு, ஆரம்பத்தில் அனல் பறந்தது. பல்வேறு தகவல்கள் வெளியாகின. சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தின் விசாரணைக் குழுவினரும் விசாரித்துவருகின்றனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் மூன்று பேரிடமும் சந்தானம் விசாரணை நடத்தியுள்ளார். விரைவில் ஆளுநருக்கு விரிவான அறிக்கையை சந்தானம் சமர்ப்பிக்க உள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையில் உள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் என போலீஸார் பிஸியாக இருக்கின்றனர்.




 இந்தச் சூழ்நிலையில் நிர்மலா தேவி, வேலைப்பார்த்த கல்லூரி மூடப்படுவதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. அது வதந்தி என்றாலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த 3ம் தேதி கல்லூரி நிர்வாகம் தரப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசிய செயலாளர் ராமசாமி, கல்லூரி குறித்து பல்வேறு தகவல்கள் வதந்தியாகப் பரப்பப்படுகின்றன. சமூக வலைதளத்தில் இந்தத் தகவல்களைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் எங்களுடன் பேரம் பேசிய பத்திரிகையாளர்கள் மீதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். அவர்கள் எங்களுடன் பேசிய ஆதாரத்தை போலீஸில் வழங்கியுள்ளோம். எனவே, எங்களின் கல்வி சேவையைத் தொடர வழிவிடுங்கள் என்று கூறினார். பிரஸ் மீட் முடிந்ததும் பத்திரிகையாளர்களுக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்துள்ளது. தற்போது, கல்லூரியில் தேர்வு நடப்பதால் நிர்மலா தேவி விவகாரத்தை யாரும் பேசுவதில்லையாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024