சென்னை: ''மதுரை மாவட்டம், தோப்பூரில், 1,500 கோடி ரூபாய் மதிப்பில், மத்திய அரசின், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த மருத்துவமனை திறக்கப் பட்டால், தமிழகத்திற்கு வரப்பிரசாத மாக அமையும். மருத்துவமனை மூலம், 19 மாவட்ட மக்களுக்கு இலவச உயர் தர சிகிச்சை கிடைக்கும்.
'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, 2015 - 16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, மதுரை - தோப்பூர், புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு ஆகிய பகுதிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஐந்து இடங்களிலும், 2015 ஏப்., 23 முதல், 25 வரை, மத்தியக் குழு ஆய்வு செய்தது.
அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பகுதிக்கு, எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என வலியுறுத்தியதால், இடத்தை தேர்வு செய்வதில், தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது, மதுரை மாவட்டம், தோப்பூர், அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, முதல்வர் பழனிசாமி நேற்று அளித்த பேட்டி:முதல்வராக, ஜெயலலிதா இருந்த காலத்தில், 'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்குகோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில், மத்திய அரசு, ஐந்து இடங்களை பார்வையிட்டது. முதலாவதாக செங்கல்பட்டு, இரண்டாவது மதுரை, மூன்றாவது செங்கிப்பட்டி, நான்காவது பெருந்துறை, ஐந்தாவது புதுக்கோட்டை ஆகிய இடங்களில், மத்தியக் குழு பார்வை யிட்டது.
தற்போது, மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற ஆணையை, தமிழக சுகாதார துறை செயலருக்கு, மத்திய
அரசு அனுப்பி உள்ளது. மதுரை அருகில் உள்ள தோப்பூரில், 200 ஏக்கர் நிலப் பரப்பில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. 750 படுக்கை வசதிகளுடன் கூடிய, நவீன மருத்துவமனை அமைய உள்ளது.
மேலும், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுடன், புதிய மருத்துவ கல்லுாரியும் ஏற்படுத்தப்படும். செவிலியர்கள், 60 பேர், பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் உண்டு.எய்மஸ் மருத்துவமனை, 1,500 கோடி ரூபாய் மதிப்பில், உருவாக்கப்பட உள்ளது. மருத்துவமனை அமைப்பதற்கு, தமிழக அரசுசார்பில், அனைத்து உதவிகளும் செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி. இதற்காக, விரைந்து செயல்பட்ட, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் நன்றி. இவ்வாறு முதல்வர் கூறினார்.
சாதித்தார் உதயகுமார்!
'மதுரை, தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால், என் பதவியை ராஜினாமா செய்வேன்' என, கடந்த ஆண்டு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.மேலும், 'மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்' என , முதல்வரிடமும் வலியுறுத்தி வந்தார்.தற்போது, 'மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. 'இது, அவருக்கு கிடைத்த வெற்றி' என, மதுரை மாவட்ட,அ.தி.மு.க., வினர் தெரிவித்தனர்.
பிரதமருக்கு கடிதம்!
மதுரை மாவட்டம், தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்டதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.'எய்ம்ஸ் மருததுவமனை அமைவதற்கு தேவையான உதவிகளை செய்யும்படி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே, மருத்துவமனை பணிகளை, விரைவாக துவக்க வேண்டும்' என்றும், அக்கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
நிருபர்களை தவிர்த்தார்!
முதல்வர் பழனிசாமி, நேற்று காலை, சென்னை,
தலைமைச் செயலகத்தில், பேட்டி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், பேட்டிக்கு, நிருபர்களை அனுமதிக்கவில்லை. 'டிவி' கேமராமேன்களை மட்டும் அனுமதித்தனர். முதல்வர் கூறியதை மட்டும், பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.நிருபர்கள் வந்தால், பல்வேறு பிரச்னைகள் குறித்து, கேள்வி எழுப்புவர் என்பதால், அவர்களை தவிர்த்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்னென்ன பயன்கள்?
* எய்ம்ஸ் மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளை கொண்டது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் இருந்தும், உயர் தர சிகிச்சைக்கு, நோயாளிகளை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய முடியும்
* மேலும், மதுரையை சுற்றியுள்ள, 18 மாவட்ட மக்கள்; கேரளா போன்ற தென் மாநில மக்கள் பயனடைவர்.
* 100 எம்.பி.பி.எஸ்., மற்றும் 60 பி.எஸ்சி., நர்சிங் படிப்புகள் உருவாகும்.
என்னென்ன நிபந்தனைகள்?
* 200 ஏக்கர் நிலத்தை, இலவசமாக வழங்க வேண்டும்
* எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், நான்கு வழிச்சாலை அமைத்து, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்
* 20 மெகாவாட் மின் வசதி, இரண்டு வழித்தடங்கள் வாயிலாக வழங்க வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
* போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
* தோப்பூரில், எண்ணெய் குழாய் பதித்துள்ள, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து, ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment