Thursday, June 21, 2018

அனுபவப் பகிர்வு: அன்பும், மனிதமுமே மாணவர்களை வழிநடத்தும்

Published : 19 Jun 2018 19:12 IST

சேகரன்

 


மூதாட்டி சாலையைக் கடக்க உதவிய மாணவர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சார்ந்தவன் நான். சென்னையைப் பற்றிய மிகப் பெரிய பிம்பம் எனக்கு உண்டு. ஆனாலும் நான் சென்னையில் படிப்பதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. இதோ இப்போது நாற்பதுகளின் நடுவில் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனக்கும்

சென்னைக்குமான உறவு பெரிதாக இல்லை என்றாலும் சென்னைக்கு மிக அருகில் வசிப்பவன் என்ற பெருமை ஒன்றே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.

நதிமூலம், ரிஷிமூலம் தேடினால் என் முன்னோர்கள் தொழில் நிமித்தமாகப் போய் வரும் இடம் சென்னையாகவே இருக்கிறது. இன்னும் எங்கள் ஊரில் சென்னையைப் பட்டணம் என்றே அழைக்கும் அளவுக்கு புராதன காலத்துடன் எங்களுக்குத் தொடர்பு உண்டு. அதனாலேயே என்னவோ யாராவது சென்னை பற்றி தப்பாகப் பேசினால் நடிகர் சந்தானத்தைப் போல எனக்கும் கோபம் வரும்.

இந்த சூழலில் என் பக்கத்து வீட்டுப் பையனைக் கல்லூரியில் சேர்ப்பதற்கு என்னையுடம் உடன் அழைத்திருந்தார்கள். ஓரளவு சென்னையில் சுற்றித் திரிந்திருந்தாலும் நுட்பமாக எனக்கு எதுவும் தெரியாது என்பதால் ஆரம்பத்தில் தயங்கினேன். அந்தப் பையன் கவுன்சிலிங் செல்ல என்னையே நம்பி இருந்ததால் பலத்த யோசனைக்குப் பிறகு சம்மதம் சொன்னேன். ரயிலில் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதெல்லாம் கொஞ்சம் அவுட் ஆஃப் சிலபஸ்தான். இன்ட்ரோ என்பதால் கொஞ்சம் பொறுத்தருள்க.

எந்த கெடுபிடியும் இல்லாமல் இலவசமாகக் கொடுக்க முடிவதும், கேட்க முடிவதும் அட்வைஸ்தான் என்று நம்பிக்கொண்டிருந்தவன் நான். 3 மணி நேரத்தைக் கழிக்க வேண்டுமே என்று பையனிடம் எனக்குத் தெரிந்ததையெல்லாம் அறிவுரை என்ற பெயரில் பேச ஆரம்பித்தேன். ஆனால், பசங்களுக்குப் பிடிக்காதே ஒரே விஷயம் அட்வைஸ் என்று அந்தப் பையனிடம் பேசிய பிறகுதான் தெரிந்தது. வாய்ப்புகளின் தேசம் சென்னை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என ஒவ்வொரு இளைஞனின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான தன்னம்பிக்கை முனை சென்னை என்று நான் கதையளக்க, அந்தப் பையன் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு வாட்ஸ் அப்பில் வம்பளந்து கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் அறிவுரை பகர்வது அலுத்துப் போக, அவனின் ஒத்துழையாமை இயக்கம் அப்பட்டமாகத் தெரிய, தலைமுறை இடைவெளி தர்மசங்கடப்படுத்த, மீசையில் மண் ஒட்டாத வெற்று சமாளிப்புடன் செய்தித்தாளில் முகம் புதைத்தேன்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்ட செய்தியைப் படித்த போது எனக்கு மாணவர்கள் குறித்த கவலை அதிகரித்தது. கல்லூரி திறந்த முதல் நாளிலேயே மாணவர்கள் சிலர், பேருந்துகளின் கூரையில் ஏறி கத்திகளைச் சுற்றியபடி ரகளையில் ஈடுபட்டதும், பொதுமக்களும் பயணிகளும் அச்சமடைந்ததும் வருத்தத்தை ஏற்படுத்தின.

ரயிலில் கத்தியைச் சுழற்றி சாகசம் காட்டும் மாணவர்கள், தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடும் மாணவர்கள் என அடுத்தடுத்து மாணவர்கள் குறித்த நெகட்டிவ் செய்திகள் கால சுழற்சியில் என்னை பின்னோக்கி நகர்த்தின. பார்க்கிற காட்சிகள், படிக்கிற செய்திகள், கேள்விப்படும் தகவல்கள் என எல்லாமே

மாணவர்களுக்கு எதிராகவே இருக்கிறதே. ஆறுதலுக்காவது ஒரு சின்ன நல்ல விஷயம் நடந்துவிடக் கூடாதா என்று கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்படி ஒரே விஷயத்தை அதி ஆழமாக இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? அது ஆரோக்கியத்துக்கான ஆபத்து என்பதை உணர்ந்து உடனே அந்தச் சிந்தனைக்கு அணை போட்டேன். ரயில் சென்ட்ரல் வந்தடைந்தது.

அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரியை நோக்கிப் பேருந்தில் சாலையேயே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சி என்னை நெறிப்படுத்தியது. என் பார்வையை மாற்றியமைத்தது.

மாணவர்கள் குறித்தும், அவர்களின் ஒழுக்கம் குறித்தும் நாமே சில முன்முடிவுகளால், கேள்விகளால் ஒட்டுமொத்தமாகக் கட்டியெழுப்பி நீ வேஸ்ட் என்று ஒரேயடியாக ஓரங்கட்டி விடுகிறோமோ என்று எனக்குத் தோன்றியது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு மூதாட்டி கடும் வெயிலில் சாலையைக் கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். யாராவது உதவிக்கு வருவார்களா என்று வழிமேல் விழி வைத்து அவர் காத்துக் கொண்டிருக்கையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் சகஜமாகப் பேச்சுகொடுத்தபடி அந்த மூதாட்டி சாலையைக் கடக்க உதவினர். சாலையைக் கடக்க வேண்டும் என்ற பரபரப்பிலும், பதற்றத்திலும் இருந்த அந்த மூதாட்டி அடுத்த நிமிடத்திலேயே எந்த அந்நியத்தன்மையும் இல்லாமல் இயல்பாக அவர்களுடன் நடந்தார்.

பாசாங்கு இல்லாத ஓர் அன்பின் நிமித்தமாய் மூதாட்டிக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே சின்னதாய் ஓர் உரையாடல் அரங்கேறியது. சக உயிர் மீதான நேசத்தை இயல்பாக அங்கே மாணவர்கள் வெளிப்படுத்தியதைக் கண்டதும் எனக்குள் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி.

ஒரு குறிப்பிட்ட கல்லூரியோ, கல்லூரி மாணவர்களோ ஆபத்தானவர்கள், பிரச்சினை செய்பவர்கள், கலகம் விளைவிப்பவர்கள், ரவுடியிசம் செய்பவர்கள் போன்ற பிம்பம் உள்ளது. அதுவே ஒட்டுமொத்த கல்லூரியின் / மாணவர்களின் பிம்பமாக, அடையாளமாக, கற்பிதமாக கட்டமைக்கப்படுகிறது. அந்த பிம்பம் போலியானது அது நிரந்தரமல்ல வெகுவிரைவில் மாறும் என்ற நம்பிக்கை மூதாட்டிக்கு உதவிய மாணவர்களின் செயலால் துளிர்த்தது. அந்த சம்பவம் தந்த உற்சாகத்துடன் அவனைக் கல்லூரியில் சேர்த்துவிட்ட திருப்தியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

இப்போதும் சென்னையில் டிராஃபிக் நெரிசலை சரி செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள், சக மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவுகிறார்கள், பால் பாக்கெட், பேப்பர் போட்டு அதன்மூலம் தனக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துகிறார்கள், முதல் தலைமுறையின் அத்தனை கஷ்டங்களையும் தாங்கி தடைகளைத் தாண்டுகிறார்கள்.

அந்தப் பையனின் அம்மா, ''என் பையன் சேர்ந்திருக்கிறது நல்ல காலேஜ்தானா தம்பி'' என்று கேட்டார். நான் பார்த்த சம்பவத்தை மனதுக்குள் நினைத்தபடி, ''உங்க பையன் நல்ல ஆளுமையா வருவான். கவலைப்படாதீங்க அக்கா. அவன் சேர்ந்திருக்கும் இடம் அவனுக்கு நல்லதைக் கற்றுக்கொடுக்கும். நிச்சயம் பெரியவங்களை மதிச்சு நடக்கிற பையனா பேர் சொல்லும்படியா வருவேன்'' என்றேன்.

அந்த அக்காவும் ''சரி தம்பி'' என்று யோசனையுடனேயே நகர்ந்தார். அவர் கேட்டதும், நான் சொன்னதும் சம்பிரதாயமான கேள்வி பதில்தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது. ஆனால், ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும். அரிய செயல்கள், சிறிய செயல்கள் என எதுவானாலும் மனிதத்தை நோக்கிய முதல் புள்ளி மாணவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது.

சின்ன விஷயத்தை பூதாகரமாகப் பெரிதுபடுத்தி வசைபாடுவதை விட, சின்னச்சின்ன நல்ல விஷயங்களை பெரிதாகப் பாராட்டினால், அங்கீகரித்தால் மாணவர்களிடையே மகத்தான மாற்றத்தைக் காணலாம். ஏனெனில், அன்பும், மனிதமுமே மாணவர்களை வழிநடத்தும். இது அனுபவ மொழி அல்ல. காட்சியின் மொழி.

No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...