ஆடவர் நல்லவரானால்...
By அருணன் கபிலன்
| Published on : 05th November 2018 02:31 AM |
திருமணத்துக்கு வெளியில் உறவில் இருப்பது குற்றமல்ல என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருப்பது பலருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒழுக்கத்திலும் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெருந்தீங்கை ஏற்படுத்தும் என்று அவர்கள் கணிக்கிறார்கள்.
காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப் பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள், புதுமையை விரும்புகிறவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனயுக விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி, பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்ட இயந்திர வாழ்வு என்று பல சிக்கல்களுக்குப் பின்னால் பழைய அறமாகிய இல்லறமும் துறவறமும் சிக்கிக் கொண்டு அல்லற்படுகிறது.
ஒருவர் மட்டுமே தனித்து வாழும் துறவறம், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் இல்லறம் என்னும் இவற்றிற்கு மாறாக ஒரு பாலினத்தைச் சேர்ந்தவரே இணைந்து வாழும் புதியதொரு நல்லறம் (?) அண்மையில்தான் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்ப்பும் வந்திருப்பதை உற்று நோக்க வேண்டும். இதுவும் ஒரு புதிய அறமாகவும் இருக்கலாம்.
குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆனபோதும் அன்றைய காலத்திலிருந்தே பெண்ணை விட ஆணின் ஒழுக்கத்தையே பெரிதென்று வலியுறுத்தித் தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து சுட்டி வந்திருக்கின்றன.
தன் கணவன் கள்வன் என்ற கொடுஞ்சொல் கேட்டவுடன் வெகுண்டெழுந்து அரசவை சென்று எரிமலைபோலப் பொங்கி வாதாடித் தக்க சான்றுகளைக் கொண்டு நிறுவி, அரசனே உயிர் துறந்தும் போதாது, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை உலகறிய வேண்டும் என்பதற்காக மதுரையை எரியூட்டினாளே தாய் கண்ணகி. அவள் தனது கணவனாகிய கோவலன் தன்னைப் பிரிந்துவிட்டு நாட்டிய மங்கையாகிய மாதவியோடு இன்புற்றிருந்தபோது எந்த அரசவைக்கும் போகவில்லை. தன் தாய் தந்தையிடத்தோ, தன் கணவனான கோவலனின் தாய் தந்தையிடத்தோ கூடப் புகார் கூறவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூகம் குறிப்பிடுகிற, பெண்களுக்கே ஏற்படுகிற இன்னலின் விளைவிது என்று கூறி அவளது தோழி தேவந்தி அதற்குப் பரிகாரமாகப் புகார் நகரத்துக்கு அருகிலிருக்கும் சோம குண்டத்திலும் சூரிய குண்டத்திலும் மூழ்கியெழுந்து காமவேளைத் தொழுதால் இந்த இன்னல் தீரும் என்று அறிவுறுத்திய வேளையில், தாய் கண்ணகி அன்றே தானே நீதிபதியாகி இந்தத் தீர்ப்பினைக் கூறிவிட்டாள். தனது தோழியின் அறிவுரைக்குக் கண்ணகி தந்த பதில் "பீடன்று' என்பதுதான். அப்படிச் செய்வது எனக்குப் பெருமையில்லை என்று தன்னை தெய்வப் பெண்ணாக்கிக் கொண்டு அவள் கூறினாள்.
ஆனால் கோவலன் திரும்பி வந்து மதுரைக்கு அழைத்துச் செல்லும் வேளையில் தனிமையில் அவன் வருந்துவதைக் கண்டு, துணிந்து "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்று இடித்துரைக்கவும் தவறவில்லை.
தாய் கண்ணகி பெண்குலத்திற்கு வழிகாட்டுகிறாள். ஆணாகிய கோவலனுக்கும் பெண்ணாகிய தனக்கும் உள்ள ஆழ்உறவுப் பிரச்னைகளை அடுத்தவரிடத்துச் சொல்ல வேண்டியதில்லை (கடவுளிடமும் கூட) என்பதே கண்ணகி மேற்கொண்டிருக்கிற நியதி.
கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இருகட்சிக்கும் அதைப் பொதுவில் வைக்கும் வழக்கம் இன்றைக்கும் வரவில்லை. ஆனால் அன்றே அப்படிப் பாடிய பாரதியார் மேலும் சில கருத்துகளையும் பெண் விடுதலை குறித்து முன்வைத்திருப்பதை இங்கு எண்ணிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால், 1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது. 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. 3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. 4. பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது. 5. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். 6. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.
7. பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். 8. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது. சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.
சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அன்னி பெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது. இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்' என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.
இதையெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குச் சாத்தியமா என்னும் கேள்வி எழலாம். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் குடும்ப உறவினைக் கடந்து வெளியுறவில் ஈடுபடுகிற ஒரு மனைவியின் கணவனாக - ஓர் ஆணாக எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும்?
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
என்பது ஒளவை வாக்கு.
No comments:
Post a Comment