Tuesday, November 6, 2018


மது குடித்தால் பரிசு: விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் கைது

By DIN | Published on : 06th November 2018 02:48 AM |

திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது குடித்தால் பரிசு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு தனியார் நிறுவனத்தினர் தங்களது விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் கவர்ச்சியான விளம்பரங்களையும், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது வழக்கம்.

ஆனால், திருவல்லிக்கேணி வல்லபா அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலின் நிர்வாகத்தினர், தீபாவளியையொட்டி ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் கலர் டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் வழங்கப்படும் என்றும், மது அருந்துவோருக்கு தின்பண்டங்கள் இலவசம் என விளம்பரம் செய்திருந்தது.
இதுதொடர்பாக ஹோட்டல் முன்பு ஒரு பெரிய விளம்பர பதாகையும் வைக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடம் விளம்பரமும் செய்தது. இதைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாம் பஜார் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தனர்.
இருவர் கைது: அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், ஹோட்டல் உரிமையாளர் முகமது அலி ஜின்னா, மதுபானக் கூட மேலாளர் வின்சென்ட் ராஜ் (25), மதுபான கூட ஊழியர் ரியாஸ் அகமது (41) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் வின்சென்ட் ராஜ், ரியாஸ் அகமது ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முகமது அலிஜின்னா முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராகவும், தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods