திசையறியாப் பறவைகள்
By வாதூலன் | Published on : 06th November 2018 01:24 AM
சில மாதங்களாக நாட்டில் நிகழும் சம்பவங்களைப் பார்க்கும்போது இது போன்ற குழப்பமான சூழல் இதற்குமுன் எப்போதுமே இருந்ததில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
எடுத்துக்காட்டாக, பஞ்சாபில் நடந்த ரயில் விபத்து. ஏடுகளில் விவரமாகப் படித்துமே, இது அந்த ஊர் உள்ளாட்சி அமைப்பின் அலட்சியம் என்று தெளிவாகத் தெரிகிறது. தசரா பண்டிகையில் நடைபெறும் ராவண விழாவுக்காக, இரவு வேளையில் பொதுமக்கள் கோஷமிட்டுக் கொண்டு போகிறார்கள். ஒரு சில பிரபல அரசியல்வாதிகளால் விழாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்தது. விழா கூச்சலில் மின்சார ரயில் வருவதைக் கவனிக்காததால் கொடூர விபத்து நேர்ந்திருக்கிறது.
மின்சார ரயில், நாலு சக்கர வாகனம் போலவோ, லாரி போலவோ அல்ல உடனே பிரேக் போட்டு நிறுத்த. காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது இந்த விழா. இந்த விபத்துக்கு மத்திய அரசையும் பிரதமரையும் குற்றம் சாட்டுவானேன்?
அனைவரும் அறிந்த சபரிமலை விவகாரத்தில் பெண்ணுரிமை பேசும் முற்போக்காளர்கள் வரம்பு மீறித்தான் செல்கிறார்கள். அதற்காக வேற்று மதம் சார்ந்த இல்லத்தில் தாக்குதல் செய்தது சரியில்லைதான். ஆனால் வெறும் வீம்புக்காக பிரச்னையை கிளப்பியதே முற்போக்கு வாதிகள்தானே? இதில் கேரள காங்கிரஸின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கும் தோழன், பா.ஜ.க.வுக்கும் எதிரி என்ற முரணான நிலைப்பாடு.
வட இந்தியாவில் நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தல்கள், அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இங்கே, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரின் கருத்தைக் குறிப்பிடலாம். இந்தியாவின் மிக முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று குறைபடவும் செய்கிறார்.
உண்மை என்னவென்றால் பல மாநிலத் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி மதில் மேல் பூனையாக இருக்கிறார். மாயாவதியின் நிலைப்பாடும் இது மாதிரிதான். ஒன்றிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்து, மத்திய அரசுடன் நட்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான நிதி பெறுவதில் சந்திரபாபு நாயுடு வல்லவராயிருந்தார். இப்போது அவருக்கு தன்முனைப்பு மேலோங்கி, மத்திய அரசுடன் மோதுகிறார். காங்கிரஸை உதறிவிட்டுத் தனியாக நிற்க முற்படும் சந்திரசேகர ராவிடம் எங்களுடன் இணையுங்கள் என்று வீரப்ப மொய்லி கெஞ்சுகிறார்.
தமிழ்நாட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே லஞ்ச ஊழலாலும், கோயில் சிலை திருட்டாலும் பெயர் கெட்டுப்போன மாநிலத்தை, இப்போது டெங்கு காய்ச்சலும், பன்றிக் காய்ச்சலும் அச்சுறுத்துகின்றன. இதில் வேதனை என்னவென்றால், அரசு அதிகாரிதான் அறிக்கை விட்டுக் கொண்டேயிருக்கிறாரே தவிர, எந்த அமைச்சரும் பொறுப்பான பதில் தருவதில்லை.
தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் போக்கும் இரை தேடும் பறவைகளைத்தான் ஞாபகப் படுத்துகின்றன. அதோடு ஒருநாளும் இல்லாத திருநாளாக ராகுல் காந்தி இந்து மதக் கோயில்களுக்கு திடீரென விஜயம் செய்கிறார்.
பாஜகவின் செயல்பாடும் அத்தனை போற்றத்தக்கதாக இல்லை என்றே கூற வேண்டும். ரஃபேல் ஊழல் வழக்கு, சிபிஐ அதிகாரிகள் மோதல் இவற்றுடன், ரிசர்வ் வங்கி கவர்னருடன் மனக்கசப்பு என்று புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. மிக முக்கியமான பிரச்னைகளில் மௌனம் சாதிக்கும் பிரதமர், குஜராத்தில் வல்லபபாய் படேல் சிலையைத் திறந்து வைத்துப் பெருமிதம் அடைகிறார்.
சுதந்திரத்துக்கு முன் பிறந்த அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, இரும்பு மனிதரான படேலுடன் நேருவுக்கு பனிப்போர் நிலவியது. மற்றொன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணத்தில் மர்மம் இருந்தது. இவ்விரண்டு தலைவர்களுக்கும் காங்கிரஸ் உரிய மதிப்பு தராமலிருந்திருக்கலாம், அதற்காக நேருவின் பங்களிப்பைக் குறைத்துப் பேசுவது முறைதானா?
தன்னிகரிலாத் தலைவராக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பிரதமராக நேரு ஆட்சி புரிந்தார். பல மாநிலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இன்றும் வெற்றிகரமாக இயங்கும் என்எல்ஸி, எச்ஏஎல் இவை இரு உதாரணங்கள்.
இங்கு வேறொன்றையும் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த நாளில் எங்கோ ஒரு மூலையில் நிகழும் தனிப்பட்ட கலவரங்களுக்குக் கூட அரசியல் சாயம் பூசி அரசியல் தலைவர்கள் சிலர் குளிர் காய்கிறார்கள். ஆனால் 1948-இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியைக் கொன்றது முஸ்லிம் அல்ல என்று ஒற்றை வரி அறிக்கையை விடுத்து அன்றைய பயங்கரமான சூழலை பெருமளவு நீர்த்துப் போகச் செய்தார் பண்டித நேரு என்பது வரலாறு.
இன்றைய அரசியல் போக்கைக் கவனித்தால், தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி திசை தெரியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தலைவர்கள் மனத்திலும் ஒரே கேள்விதான்: யாருடன் கூட்டு வைத்தால் வெற்றி? நிகழப் போகிற மாநிலத் தேர்தல்கள், மோதலோ, வன்முறையோ இல்லாமல், பொதுத் தேர்தலுக்கு ஒரு நல்ல முன்னோட்டமாக அமையும் என்று நம்புவோமாக.
No comments:
Post a Comment