Tuesday, November 6, 2018

இவர்களுக்கு தீபாவளி இல்லையா?

Published : 06 Nov 2018 08:30 IST

புது டெல்லி
 



பொதுவாக டி.வி.யில் விளம்பரங்கள் தோன்றும்போது நாம் பெரும்பாலும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். ஆனால் வெகு அபூர்வமாக சில விளம்பரங்கள் நமது மனதை வெகுவாக பாதித்துவிடும்.

அந்த வகையில் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனம் தனது பிரிண்டரை பிரபலப்படுத்த தயாரித்துள்ள விளம்பர படம் நிச்சயம் அனைவரைது நெஞ்சையும் உலுக்கிவிடும்.

ஒரு வட இந்திய பெண்மணி, சாலையோரம் அகல் விளக்குகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அந்த வழியாக செல்வோர் பலரும் அவரை பார்த்தபடியே சென்று கொண்டிருப்பர்.

மார்கெட்டிற்கு தனது தாயுடன் வந்த சிறுவன், தனது அம்மாவிடம் அகல் விளக்கு வாங்கலாமா? என்பான், ஆனால் அவனது தாய் அவனை இழுத்துச் சென்றுவிடுவார். அவன் ஓடி வந்து சில அகல் விளக்குகளை அவரிடம் வாங்கி, ``இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா'' என்று கூறுவான். அதற்கு அந்த பெண்ணோ, எங்களுக்கு ஏது தீபாவளி, இவ்வளவு அகல் விளக்குகளும் விற்பனையானால்தான் எங்களுடைய வீடுகளில் விளக்கு எரியும் என்பார்.

உடனே தன்னிடம் உள்ள போனில் அவரை புகைப்படம் எடுப்பான். அவரும் கவலை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

வீட்டிற்கு வந்த அந்த சிறுவனோ தான் எடுத்த புகைப்படத்தை கம்ப்யூட்டரில் பெரிதுபடுத்தி, அத்துடன் ``இனிய தீபாவளி, அம்மாவின் தீபாவளி'' என்ற வாசகத்துடன் அவர் அமர்ந்திருக்கும் மார்கெட் பகுதி முகவரியைப் போட்டு, இங்கு அகல் விளக்குகள் கிடைக்கும் என்ற செய்தியோடு பிரிண்ட் எடுப்பான். பல பிரிண்ட் எடுத்து சைக்கிளில் சில வீடுகளுக்கும், கடை களுக்கு வருவோர் போவோருக்கும் விநி யோகிப்பான்.

அடுத்த சில மணி நேரங்களில் பலரும் வந்து அகல் விளக்குகளை வாங்கிச் செல்வர்.

இரவு நேரம் வரும்போது அந்த சிறுவன் மீண்டும் வந்து அகல் விளக்கு விற்பனை செய்த அந்த பெண்மணியிடம் , அகல் விளக்கு இருக்கிறதா என்று கேட்பான். அவரோ எல்லாம் விற்பனையாகிவிட்டது என்பார். நான்தான் காலையில் சொன்னேனே, இரவிற்குள் அனைத்தும் விற்றுவிடும் என்று கூறியபடி சைக்கிளில் செல்வான். கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவர் திரும்பிப் பார்க்கும்போது அவன் செல்வது மட்டும் தெரியும். ஓடிச் செல்ல அவர் முயலும்போது, அந்த சிறுவன் எடுத்த பிரிண்ட் நகல் ஒன்று அவர் காலில் தட்டுப்படும். அதை எடுத்துப் பார்க்கும்போதுதான் சிறுவனின் முயற்சி புரியும். இவர்களுக்கு தீபாவளி கிடையாதா, சாலையோர வியாபாரிகளையும் கவனியுங்கள் என்பதாக வாசகம் இருக்கும்.

நான்கு நாளில் இந்த வீடியோவை 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் முன்பு கையில் கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தி பொய்யல்ல உண்மை என்பது இதைப் பார்த்த பிறகு நீங்களும் உணர்வீர்கள்.

பெரிய கடைகளை நோக்கி படையெடுக்கும் உங்களைப் போன்ற பலரையும் இனி சாலையோர வியாபாரிகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மண்ணின் மனிதர்களுக்காக பன்னாட்டு நிறுவனம் எடுத்த விளம்பரப் படம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024