Thursday, June 13, 2019

மருத்துவ கல்வி இயக்குனரகம் முற்றுகையிட்ட டாக்டர்கள்

Added : ஜூன் 13, 2019 00:31

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்த டாக்டர்களுக்கு, கவுன்சிலிங் நடத்தாமல், தன்னிச்சையாக பணியிடங்கள் ஒதுக்கப்படுவதாக கூறி, மருத்துவ கல்வி இயக்குனரகத்தை, டாக்டர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள், கிராமப்புறங்கள், மலைவாழ் பகுதிகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியாற்றும் ஆண்டுகள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரும் போது, சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது.அவர்கள், முதுநிலை படிப்பை நிறைவு செய்ததும், கவுன்சிலிங் நடத்தி, பணி மூப்பு அடிப்படையில், பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

இவை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஊரக பகுதி மருத்துவ சேவைகள் என, வகைப்படுத்தப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கப்படும்.இந்தாண்டுக்கான கவுன்சிலிங், இதுவரை நடத்தவில்லை. அதற்கு மாறாக, ஊரக பகுதிகளுக்கு, தன்னிச்சையாக பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர்கள், தினமும் மருத்துவ கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். நேற்றும் முற்றுகை போராட்டம் நடந்தது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:கிராமப்புறங்களில் சேவையாற்றிய எங்களுக்கு, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்ற, ஆணை வழங்கப்படவில்லை.

அதற்கு மாறாக, பணம் பெற்று, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்றியவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ கல்வி இயக்கக மருத்துவமனைகளில், ஏற்கனவே, 850 டாக்டர் பணியிடங்கள் கூடுதலாக உள்ளன. 'அதனால், அவர்களுக்கு, ஊரக மருத்துவமனைகளில் பணியாற்ற, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024