Thursday, June 13, 2019

'ஏசி'க்குள் மூன்று மாசம் வாசம்; பக்குவமாக மீட்கப்பட்ட பாம்பு

Updated : ஜூன் 13, 2019 02:00 | Added : ஜூன் 13, 2019 00:45



புதுச்சேரி: புதுச்சேரியில், வீடு ஒன்றின், 'ஏசி' இயந்திரத்தில், மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமிட்டிருந்த பாம்பை, வனத் துறையினர் பிடித்தனர்.

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு, சாய் ஜீவா சரோஜினி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை; சமூக நலத்துறை அலுவலர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் படுக்கை அறையில், 'ஸ்பிளிட் ஏசி'யை போட்டுள்ளார். அதில், வழக்கத்திற்கு மாறாக சத்தம் வந்தது. பழுதாகி விட்டது எனக் கருதி, 'ஏசி'யை நிறுத்தி விட்டார். நேற்று காலை, 'ஏசி' இயந்திரத்தை பழுது நீக்க, மெக்கானிக் கழற்றியபோது, உள்ளே, இரண்டு பாம்பு தோல்கள் இருந்தன. மெக்கானிக், 'ஏசி'யின் கீழ் பகுதியில் லைட் அடித்து பார்த்தபோது, பாம்பு மறைந்திருந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் கிடைத்து, வனத் துறை ஊழியர்கள் இருவர் வந்து, ஒரு மணி நேரம் போராடி, 'ஏசி' இயந்திரத்திற்குள் மறைந்திருந்த, 2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டனர். 'ஏசி'யின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைன் துளையை, சரியாக அடைக்காததால், அதன் வழியாக பாம்பு, 'ஏசி' இயந்திரத்திற்குள் புகுந்துள்ளது தெரிந்தது. அந்த துளைக்கு அருகிலேயே மரம் இருந்தது, பாம்புக்கு வசதியாக போய் விட்டது. அடிக்கடி வெளியில் சென்று, இரை எடுத்து, மீண்டும், 'ஏசி' இயந்திரத்திற்குள் வந்து தங்கியுள்ளது.

'குறைந்தது மூன்று மாதங்கள், ஏழுமலை வீட்டில், விருந்தாளியாக பாம்பு தங்கியிருக்கலாம். 'ஏசி' இயந்திரத்திற்குள் இரண்டு முறை தோல் உரித்துள்ளது, இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது' என, வனத் துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024