Tuesday, June 18, 2019

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம்!

Added : ஜூன் 17, 2019 23:35

சென்னை:''தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லை. குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக, வீண் வதந்திகளை பரப்புகின்றனர்,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி கூறினார். 

தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னையில், 'நெ.௨' உந்துதல் முடித்த பிறகு, கழுவக் கூட தண்ணீர் இல்லாத நிலையில், அமைச்சரின், 'தமாஷ்' பேச்சைக் கேட்ட மக்கள், கொந்தளித்துப் போயுள்ளனர்.குடிநீர் வினியோக பணிகள் குறித்து, ஆய்வு கூட்டம், உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி தலைமையில், சென்னை மாநகராட்சியில், நேற்று நடந்தது.இதில், அமைச்சர் வேலுமணி பேசியதாவது:தமிழகத்தில், சென்னை மாநகராட்சி நீங்கலாக, கோடை கால குடிநீர் தேவையை சமாளிக்க, 675 கோடி ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், லாரிகள் வாயிலாக, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

.'அம்ரூத்'

மேலும், சென்னை குடிநீர் வாரியத்தில், 2,638 கோடி ரூபாய் செலவில், 4,098 பணிகளும், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சி சார்பில், 16 ஆயிரத்து, 109 கோடி ரூபாய் செலவில், 11 ஆயிரத்து, 519 குடிநீர் பணிகளும் நடைபெறுகின்றன.மத்திய அரசின், 'அம்ரூத்' திட்டத்தில், மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில், 18 பெரிய குடிநீர் திட்டப் பணிகள், 6,496 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகின்றன.தமிழகம் முழுவதும், 730 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில், தினமும், மீஞ்சூர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக, 18 கோடி லிட்டர்; வீராணம் ஏரியிலிருந்து, ஒன்பது கோடி லிட்டர்; நெய்வேலி சுரங்கத்திலிருந்து, ஆறு கோடி லிட்டர்; நெய்வேலி ஆழ்துளை கிணறுகளில் இருந்து, மூன்று கோடி லிட்டர் கொடுக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, ஆழ்துளை கிணறுகளில் இருந்து, 16.5 கோடி லிட்டர் என, 52.5 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் வினியோகம் தொய்வின்றி நடக்கிறது. பொது மக்கள், வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான, குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம்.

கண்காணிப்பாளர்

எதிர்க்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளை பரப்பக் கூடாது. சென்னையில், மழை இல்லாவிட்டாலும், தண்ணீரை வழங்கி வருகிறோம். தண்ணீர் பிரச்னையால், ஓட்டல்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த, ஐ.டி., நிறுவனங்கள் மூடப்படவில்லை. தண்ணீர் பிரச்னையால், ஓட்டல்களில், வாழை இலை, பாக்கு மட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.டி., நிறுவன பணியாளர்கள், வீட்டில் இருந்து பணிபுரிவது வழக்கமானது.கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும், குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக கமிஷனர் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் வேலுமணியின் பேட்டியைக் கேட்ட பொதுமக்கள், கொந்தளித்துப் போயுள்ளனர். 'நெ.௨க்கு கழுவக் கூட இங்கே தண்ணி இல்லே... இவரு, 'தமாஷ்' பண்றதா நினைச்சு, இப்படி பேசுகிறாரே...' என, சென்னை மக்கள் ஆத்திரம் கொள்ளத் துவங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...