Tuesday, June 18, 2019

'சென்னை பக்கம் வந்துடாதீங்க...' 'சென்னை பக்கம் வந்துவிடாதீங்க...' உறவுகளிடம் கெஞ்சும் மக்கள்!

Added : ஜூன் 17, 2019 23:04 |

'தயவு செய்து சென்னை பக்கம் வந்துடாதீங்க...' என, வெளியூர்களில் வசிக்கும் உறவுகளுக்கு, சென்னைவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்று அழைக்கப்பட்ட, சென்னை மாநகரம், 'யாரும் வராதீர்கள்' எனக் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், பருவ மழை பொய்த்ததன் காரணமாக, சென்னை மாநகரில், இதுவரை இல்லாத அளவிற்கு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நீர் நிலைகள் அனைத்தும், வறண்டு கிடக்கின்றன. வெயிலின் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. நிலத்தடி நீர் மட்டம், அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல், ஆழ்துளை கிணறு அமைத்தால், உப்பு நீர் உட்புகுந்து விடுகிறது. இதனால், ஆழ்துளை கிணறு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நிலத்தடி நீரை நம்பியிருந்தோரும், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தை நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, மக்களுக்கு வழங்கி வந்த குடிநீரை வழங்க முடியாமல், குடிநீர் வாரியம் தடுமாறி வருகிறது. லாரிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த, தனியார் நிறுவனங்களும், குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றன. இதனால், பணம் கொடுத்தாலும், தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், பல்வேறு வாழ்வியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.சென்னையில், பெரும்பாலானோர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, வீட்டின் உரிமையாளர், தண்ணீருக்கு தனியே பணம் வசூலிக்க துவங்கி உள்ளதால், வாடகையுடன் கூடுதல் தொகை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அத்துடன், விருந்தினர்களை அழைத்து வராதீர்கள் என, வீட்டின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால், பெரும்பாலானோர், வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களிடம், 'தயவு செய்து, கொஞ்ச நாளைக்கு, சென்னை பக்கம் வர வேண்டாம்' எனக்கூறி உள்ளனர். 'விருந்தினர் உபசரிப்பு'க்கு பெயர் பெற்ற தமிழர்கள், விருந்தினர்களை வர வேண்டாம் எனக்கூறும் அவல நிலைக்கு, அரசு தள்ளி உள்ளது.பெரும்பாலான பகுதிகளில், தண்ணீர் இல்லாததால், வாடகைக்கு குடியிருப்போர், வீடுகளை காலி செய்து வருகின்றனர்.தற்போது வாடகைக்கு வீடு பார்த்து சென்றால், அங்கு தண்ணீர் இருக்காதோ என்ற அச்சத்தில், வாடகைக்கு வீடு பார்ப்போரும், இப்போதைக்கு இடம் மாற வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.இதனால், வீட்டின் உரிமையாளர்களுக்கு, வாடகை வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும். இதைத் தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர் -




No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...