Friday, June 21, 2019

பொறியியல் கல்விக் கட்டண உயர்வு: அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதல்

By DIN | Published on : 21st June 2019 01:11 AM |

அண்ணா பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வுக்கு அரசும், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளன. 

இந்த உயர்வின்படி இப்போது ஒரு பருவத்துக்கு (6 மாதங்கள்) ரூ.8,500 என்ற அளவில் இருந்த கல்விக் கட்டணம், ரூ. 15,000-ஆக
உயர்த்தப்படும். ஒவ்வொரு படிப்புக்கும் இந்தக் கல்விக் கட்டணம் மாறுபடும். அந்த வகையில், குறைந்தபட்சமாக ரூ. 15,000 என்ற அளவிலும், அதிகபட்சமாக ரூ. 23,000 வரையிலும் கட்டண உயர்வு இருக்கும்.
நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அண்ணா பல்கலைக்கழகம், அதன் நான்கு பிரிவுகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடவியல் பள்ளி, எம்.ஐ.டி. மற்றும் 13 உறுப்பு கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்த முடிவு செய்தது.

அதன்படி, பல்வேறு பொறியியல் படிப்புகளுக்கு பல ஆண்டுகளாக ஒரு பருவத்துக்கு ரூ. 8,500 முதல் ரூ. 12,000 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் குறைந்தபட்சம் ரூ. 20,000-ஆகவும் அதிகபட்சமாக ரூ, 30,000-ஆகவும் உயர்த்த முடிவு செய்தது.
இந்த உயர்வுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் நிதிக்குழு ஒப்புதலுடன், அரசின் ஒப்புதலுக்காக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. ஆனால், இந்த கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி அளிக்காததோடு, கட்டண உயர்வை சற்று குறைத்து மீண்டும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுக்கு எடுத்து வருமாறு அறிவுறுத்தியது.

30 சதவீதம் குறைக்க அறிவுறுத்தல்: இதற்கிடையே, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செயலர் மங்கத்ராம் ஷர்மா ஆகியோரிடம், இந்த கல்விக் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ள பொறியியல் கல்விக் கட்டண உயர்வை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதே நேரம், அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் எந்தவித உயர்வும் இந்த ஆண்டு இருக்காது என்றனர்.

ஆட்சிக்குழு ஒப்புதல்: இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்சிக்குழுவில் அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில், பரிந்துரைத்த பொறியில் கட்டண உயர்வை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக 4 பிரிவுகளில் வழங்கப்படும் பி.இ. படிப்புகளுக்கான ஒரு பருவ கட்டணம் நிகழாண்டில் இருந்து குறைந்தபட்சமாக ரூ. 15,000 முதல் அதிகபட்சமாக ரூ. 23,000 வரை வசூலிக்கப்படும். அதே நேரம், பல்கலைக்கழக 13 உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உயர்வு இதைவிட சற்று குறைவாகவே வசூலிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025