Friday, June 21, 2019

செயல்படத் தொடங்கியது ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

By DIN | Published on : 21st June 2019 02:32 AM

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கதிரியல் துறையில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட அதிநவீன கருவிகள்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வந்த மருத்துவமனையில் ஒரு பிரிவு மட்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
அடுத்த சில மாதங்களில் மருத்துவமனை முழுமையாகச் செயல்படும் என்றும், அதன் பின்னர் அனைத்து நோய்களுக்கும் பொது மக்கள் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன.

அப்பணிகள் முழுமையாக நிறைவுப் பெறாததால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி மட்டும் அங்கு செயல்பட்டு வந்தது.
பொதுவாக மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனையும் செயல்பட வேண்டும் என்பது விதி.

ஆனால், ஓமந்தூரார் வளாகத்தில் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள அரசு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையானது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இதையடுத்து மருத்துவமனையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடக்கமாக, மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் ரூ.2.70 கோடி மதிப்பில் நிறுவப்பட்ட 16 சிடி ஸ்கேன் கருவிகள், எக்ஸ்-ரே உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்ர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக இம்முறையும் நடத்தவுள்ளது.
இதைத் தவிர மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் இங்கு உள்ளன.

கல்லூரி வளாகத்தில் மொத்தம் ரூ.345 கோடி செலவில் 7 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தலா இரு கட்டடங்கள் மருத்துவக் கல்லூரி மற்றும் மாணவர் விடுதியாகவும், 3 கட்டடங்கள் மருத்துவமனையாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தற்போது மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து படிப்படியாக பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம் என அனைத்து துறைகளும் செயல்பாட்டுக்கு வர உள்ளன என்றார் அவர்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...