அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 153 மாணவ–மாணவிகளுக்கு கவர்னர் கே.ரோசய்யா பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா
சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட மொத்தம் 703 கல்லூரிகள் உள்ளன. இத்தனை கல்லூரிகளும் அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன.அனைத்து கல்லூரிகளிலும் உள்ள தங்கப்பதக்கம் பெற்ற மாணவ–மாணவிகள், பிஎச்.டி. பட்டம் பெறும் மாணவர்கள் மட்டும் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அண்ணாபல்கலைக்கழக 35–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா கலைஅரங்கில் நேற்று நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் வரவேற்று பேசினார். விழாவில் பி.இ., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஆர்க்., எம்.பிளாண், எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
1 லட்சத்து 85ஆயிரம் பேருக்கு பட்டம்
மேரி வெரோனிகா அமிர்தா, கின்சன் பிரபு உள்பட 138 மாணவ–மாணவிகள் தங்கப்பதக்கங்கள் பெற்றனர். நேரடியாக நேற்று 1148 பேர் பட்டம் பெற்றனர். விழாவுக்கு வராமல் 1 லட்சத்து 84ஆயிரத்து 5 பேர் பெற்றனர்.
மொத்தத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 153 மாணவ–மாணவிகள் பட்டம் பெற்றனர். கவர்னர் கே.ரோசய்யா கலந்துகொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பசுமை புரட்சிசெய்து வரும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
சதுப்புநிலக்காடுகளை வளருங்கள்
இந்தியாவில் காசநோய் பாதித்தவர்களில் 55 சதவீதம் பேர்கள், உடலில் சத்து இல்லாத காரணத்தால் தான் அந்த நோய் தாக்கியது என்று தெரிய வருகிறது. நல்ல சத்தான உணவே நோய்களை தடுப்பதற்கு மூலக்காரணமாகும். அதற்கு உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறவேண்டும். முதல் கட்டமாக அதற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும்.
சுனாமி வந்தபோது, சதுப்புநிலக்காடுகள்(மாங்குரோவ் காடுகள்) இருந்த பகுதியில் சுனாமியின் தாக்கம் அதிகம் இல்லை. உதாரணமாக சிதம்பரம் பிச்சாவரத்தில் சதுப்புநிலக்காடுகள் உள்ளன. எனவே ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் சதுப்புநிலக்காடுகளை வளர்த்தால் சுனாமி போன்ற எந்த கடல் தாக்கமும் இருக்காது. பார்வை 2020 திட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆராய்ச்சி உதவியாக இருக்கவேண்டும்.
இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் பேசினார்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீண்குமார், தொழிற்சாலைகள் துறை செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் பி.மன்னர் ஜவகர், காளிராஜ், டீன்கள் நாராயணசாமி, தாமரைச்செல்வி, சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment