தமிழக மருத்துவ கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 2 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவின் மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கும், 2 மருத்துவ கல்லூரிகளுக்கும் நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கே.சாகித்யா மற்றும் மாணவர் எல்.கணபதி நாராயணன் ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நிபந்தனைகளுடன் அனுமதி
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இந்தியா முழுவதும் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள சென்னை மெடிக்கல் காலேஜ், சென்னையில் உள்ள தாகூர் மெடிக்கல் காலேஜ் ஆகிய 2 மருத்துவ கல்லூரிகளும் 2014–15–ம் ஆண்டில் சில நிபந்தனைகளோடு 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப்பிரிவில் 150 இடங்களை நிரப்பலாம் என்று அனுமதிக்கப்பட்டன.
இதன்படி மனுதாரர்கள் இருவரும் சென்னையில் உள்ள தாகூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.
மதிப்பெண் பெற்றிருந்தும்...
ஆனால் மேற்குறிப்பிட்ட 2 மருத்துவ கல்லூரிகளும் தமிழக அரசு அறிவித்தபடி 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் 46 மட்டுமே இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மனுதாரர்கள் கே.சாகித்யா மற்றும் எல்.கணபதி நாராயணன் ஆகியோர் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு தகுதி பெறும் அளவில் 197.25 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தாகூர் மருத்துவ கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.
உத்தரவுக்கு எதிரானது
இது, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு மருத்துவ கல்லூரி அனுமதிக்கு 69 சதவீதத்துக்கு பதில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.
எனவே மனுதாரர்களுக்கு மேற்கண்ட மருத்துவ கல்லூரிகளில் அனுமதி வழங்குமாறு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.
பதில் அளிக்க உத்தரவு
அவர், ‘‘ஏற்கனவே சாஹ்னி என்பவர் தொடுத்த வழக்கின் மீது வழங்கிய தீர்ப்பில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரையும் மருத்துவ படிப்பில் அனுமதி வழங்க தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகள் வருகிற 14–ந் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment