Thursday, November 6, 2014

அவசரம்... அவசியம்!

எய்ம்ஸ் மருத்துவமனை (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனை) தமிழ்நாட்டில் அமையுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தந்திருக்கும் மிகநீண்ட பதிலைப் பார்க்கும்போது - ஒரு வரியில் சொல்வதென்றால் - இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான்.

மாநில அரசு தெரிவித்துள்ள இரண்டு இடங்கள் குறித்து பரிசீலித்து, அந்த இடத்தை மத்தியக் குழு பார்வையிட்டு, அங்கு மணல் கனிம ஆய்வுகளை நடத்தி, அந்த இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து... இப்படியாக எல்லாவற்றையும் நடத்தி முடிக்க குறைந்தது 3 ஆண்டுகளாகும். ஆகவே இப்போதைக்கு சாத்தியமில்லை.

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 1956-இல் அமைக்கப்பட்டது. இதன் வளர்ச்சிக்கு ஏற்ப இதன் உறுப்புக் கல்லூரியாக எய்ம்ஸ்-2 தொடங்கும் முடிவு 2009-இல் எடுக்கப்பட்டு, இதற்கான நிலத்தை ஹரியாணா மாநிலத்தில் (ஜாஜ்ஜர்) கையகப்படுத்தி, 2012-இல்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அங்கே வெளிநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்படுகிறது.

2012-ஆம் ஆண்டில்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 6 மாநிலங்களில் தொடங்க அனுமதிக்கப்பட்டது. போபால் (மத்தியப் பிரதேசம்), புவனேசுவரம் (ஒடிசா), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பாட்னா (பிகார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ரிஷிகேஷ் (உத்தரகண்ட்) ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்தன. அதாவது, 56 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை பல்வேறு மாநிலங்களில் உருவெடுத்தன. அதிலும்கூட பாரபட்சமாக, தென்னிந்தியாவை மத்தியஅரசு கருத்தில் கொள்ளவில்லை.

2014-ஆம் ஆண்டு மேலும் 4 மாநிலங்களில் (கோரக்பூர் - உத்தரப் பிரதேசம், கல்யாணி - மேற்கு வங்கம், மங்களகிரி -ஆந்திரம், நாகபுரி - மகாராஷ்டிரம்) எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், மேற்கு வங்கம் தாங்கள் விரும்பும் இடத்தில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று இன்னும் திட்டத்தை தொடங்காமல் இருக்கிறது. இம்முறையும்கூட தமிழ்நாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை சேலத்தில் அமைப்பதா, திருச்சியிலா என்று மாநில அரசு தீர்மானமாகத் தெரிவிக்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

பொறியியல் தொழில்நுட்பக் கல்வியைப் பொருத்த அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஐ.ஐ.டி. தொடங்கப்பட்டதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.டி. தொடங்கப்பட்டதைப் போல, மருத்துவக் கல்விக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு 1960-களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் செய்யவில்லை. மாநில அரசுகளும் வலியுறுத்தவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவ அறிவியல் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஜீரண உறுப்புகளுக்கு சிறப்பு மருத்துவர் என்ற நிலை மாறி, கல்லீரல், மண்ணீரல், கணையம் என ஒவ்வொன்றுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் நிலையும், மாற்றுக் கல்லீரல், மாற்று இருதயம், மாற்றுச் சிறுநீரகம் என்று மருத்துவ அறுவைச் சிகிச்சையில் சாதனைகள் எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே, மிக அதிநுட்பமான அறுவைச் சிகிச்சைகளும், அதைப் பயில்வதற்கும், சிறப்பு மருத்துவ முதுநிலைப் பட்டம் வழங்குவதற்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவசியம் தேவை.

அதுமட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் தரமும், செயல்பாடுகளும் தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் வகையில் இல்லாத நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் சாமானியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். எய்ம்ஸ் மருத்துவ மனையை முன்மாதிரியாகக் கொண்டு அரசு மருத்துவமனைகளின் தரமும் செயல்பாடும் அதிகரிக்கக் கூடும்.

இன்று ஆண்டுக்கு 46,500 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் படித்து முடித்து வெளியேறுகின்றனர். முதுநிலை மருத்துவப் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை 16,000-ஆக இருக்கிறது. அதாவது, எம்.பி.பி.எஸ். படிப்பவர்களில் பாதிப்பேருக்குக்கூட முதுநிலை மருத்துவப் பட்டத்துக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்சம் ரூ.1 கோடி நன்கொடை அளிக்க வேண்டியிருப்பதாக, முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலுவோர் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து, ஆண்டுதோறும் 300 பேருக்கு முதுநிலை மருத்துவப் பட்டம் வழங்குவதோடு, அந்த மாநிலத்தின் மக்களுக்கு சிறந்த, தரமான மருத்துவம் வழங்கும் வாய்ப்பையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024