Thursday, November 6, 2014

வாழ்க்கை முழுவதும் மாணவனாகவே இருக்கலாம்…



ஒருவன் பிறக்கும் போது துவங்கும் வாழ்க்கை அவனது மூச்சு நிற்கும் போது முடிந்து போகிறது. அதே சமயம், ஒருவன் எப்போது வாழ்க்கையில் கற்றலை நிறுத்துகிறானோ அப்போது அவன் வளர்ச்சியும் நின்று விடும் என்பது வாழ்க்கை கூறும் தத்துவம்.

கற்பது என்பது வெறும் பள்ளி, கல்லூரிகளில் அளிக்கப்படும் படிப்பு அல்ல.. அது வாழ்க்கையில் நாம் பல்வேறு விஷயங்களைத் தேடி நாடி அறிந்து கொள்வதை குறிப்பதாகும்.

கற்றல் என்பது ஒரு தேடலில் துவங்குகிறது. ஒரு விஷயத்தை பற்றி நமக்கு சந்தேகம் எழும்போது, அது பற்றி விளக்கம் பெற தேடி அலைந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும். கற்று தெளிந்த பிறகு அதன் மீது ஏற்படும் ஆர்வம் மேற்கொண்டு அந்த துறையில் பல்வேறு விஷயங்களைக் கற்கத் தூண்டுகிறது.

கற்பது என்பது உங்களது சுய முன்னேற்றத்துக்கு உதவுவதோடு மட்டும் அல்லாமல் உங்களது அறிவினை வளர்ப்பதாகவும் இருக்கும்.

இனி படித்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று ஒரு போதும் சிந்தனையில் தோன்றக் கூடாது. படிக்க வேண்டும், நூல்களை தேடிச் சென்று படிக்க வேண்டும், ஒவ்வொரு நூலும் உங்களது சிந்தனையை ஒவ்வொரு விதத்தில் அசைத்துப் போகும். அப்போது எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தேடி இன்னும் அதிகமாக நீங்கள் கற்க வேண்டியிருக்கும்.

எனவே, ஒரு தொழிலை செய்பவராயினும், பணியாற்றுபவராயினும் உங்கள் கற்றல் திறன் தொடர்ந்து உங்களுடனேயே இருந்து கொண்டிருந்தால் தான் அது உங்களுக்கு உயர்வினை அளிக்கும்.

தேங்கிய நீரில் தான் பாசிப் பிடிக்கும் என்பது போல, ஒரே இடத்தில் தேங்கும் மனிதனின் மனதில்தான் தீய குணங்களும், சேம்பேறித்தனமும் குடிகொள்ளும்.

தமிழகத்துக்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த ஜி.யு. போப், தமிழ் மொழியின் இனிமையை ருசித்தவராகையால் தனது கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
திருக்குறள், திருவாசகம், திருவெண்பாமாலை உள்ளிட்ட பல்வேறு சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், தான் ஒரு தமிழ் அறிஞன் என்று கூட பொறித்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். ஆனால், அவரது அறிவுத் தாகம்தான் அவரை மாணவன் என்று குறிப்பிட விரும்பிற்று.

எனவே, எப்போதும் நாம் மாணவனாகவே இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றை தேடிச் சென்று பயில வேண்டும். முன்பெல்லாம் நூல்களைக் கற்க நூலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இணையதளம் என்ற சக்தி வந்த பிறகு, உட்கார்ந்த இடத்திலேயே பல அரிய நூல்களை வாசிக்கும் வசதி வந்துவிட்டது.

இப்போதும் இணையதளத்தில் தேவையற்ற விஷயங்களை பேசுவதை விடுத்து, புதிய விஷயங்களை தேடிப் படிப்போம்… மாணவனாகவே இருப்போம்…

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024