மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில், மணிக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தூரில் நேற்று முன்தினம், மபி மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அம்மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் விஜய் வர்கியா, வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை துவக்கி வைத்தார். அம்மாநில அரசின் அட்டல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்விஸ் (ஏ.இ.சி.டி.எஸ்) சார்பில் முதல்கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏ.இ.சி.டி.எஸ் நிர்வாக இயக்குநர் சந்தீப் சோனி ‘தி இந்து’விடம் கூறும்போது, “முதல்கட்டமா நகரின் 15 இடங்களில் வாடகை சைக்கிள் மையங்களை அமைக்க இருக்கிறோம். இதை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு ஹெல்மட் இலவசமாக அளிக்கப்படும். அதை சைக்கிளுடன் திருப்பி ஒப்படைத்து விட வேண்டும். ரூ.500 கொடுத்து இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்பவர்களுக்கு ஒரு ‘ஸ்மார்ட் கார்டு’ தரப்படும். இதில், ரூ.200 பாதுகாப்புத் தொகையாகக் கருதப்படும். மீதித் தொகையில் சைக்கிளுக்கான வாடகை கழித்துக் கொள்ளப்படும்.” என்றார்.
மோட்டார் பைக் மற்றும் கார் போன்ற அதிவேக வாகனங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் மாநில அரசே வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடபட்டுள்ளது.
No comments:
Post a Comment