வங்கிச் சேவை என்பது மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கவும், விவசாயிகள், சிறு வியாபாரிகள், புதிய தொழில் முனைவோர் ஆகியோரின் நலன்களைப் பேணவும், சாமானிய நடுத்தர மக்களின் அன்றாட வரவு - செலவுகளைப் பாதுகாப்பாக நடத்தவும் பயன்பட வேண்டும் என்பதுதான் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான காரணம். தனியார்மயம் என்பது போட்டிக்கு வழிகோலி வாடிக்கையாளர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டதன் பொருள் இப்போதுதான் விளங்கத் தொடங்கி இருக்கிறது.
ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர், அதே வங்கியின் "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' (ஏடிஎம்) மையங்களில் மாதத்துக்கு ஐந்து முறைக்கு மேலாக அட்டையைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு கூடுதல் பயன்பாட்டுக்கும் ரூ.20 சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இது மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, தில்லி ஆகிய ஆறு பெருநகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வெள்ளோட்டம்தான். இந்த நடைமுறை மெல்ல மெல்ல இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவு செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதிய விதிமுறைப்படி "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' சேவை என்பது, வெறுமனே பணம் எடுப்பது மட்டுமே அல்ல. இதுநாள்வரை, சேவையாக கருதப்படாதவையான வங்கிப் பரிவர்த்தனை விவரம் (மினி ஸ்டேட்மென்ட்), இருப்பு விவரம் (பாலன்ஸ் என்கொயரி), ரகசிய எண்ணை மாற்றுதல் ஆகியவையும் சேவை எண்ணிக்கையில் சேர்ந்துவிடும். தவிர, சாதாரணமாகப் பணம் எடுப்பதை சேவை எண்ணிக்கையில் கூட்டி, ஒவ்வொரு முறையும் ரூ.20 பிடித்தம் செய்வது வாடிக்கையாளர்களை நூதன முறையில் கொள்ளை அடிக்கும் திட்டம் அல்லாமல் வேறு என்ன?
"தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்கள் தாக்கப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன, மிரட்டிப் பணம் பறித்தல், சில நேரங்களில் கொலைகூட நடந்திருக்கிறது என்பதெல்லாம் உண்மையே. "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்களின் குளிர்சாதன வசதி, வெளிச்சம் ஆகியவற்றுக்கும் பாதுகாவலருக்கான ஊதியம் ஆகியவற்றையும், கணக்கிடும்போது, இத்தகைய கட்டணங்கள் சரிதான் என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது. இப்படி ஒரு வாடிக்கையாளருக்கு இணைய வங்கிச் சேவை (நெட் பேங்கிங்), செல்பேசி வங்கிச் சேவை (மொபைல் பேங்கிங்) ஆகியவற்றைப் பயன்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்துவதன் மூலம், இத்தகைய "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்களின் எண்ணிக்கையை பாதுகாப்பான இடங்களில் மட்டும் இருக்கும் வகையில் குறைத்துவிட முடியும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எல்லா வாடிக்கையாளருமே மடிக்கணினி, ஆன்ராய்டு தொழில்நுட்பம் சார்ந்த செல்பேசிகளுடன் இல்லை. இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கிச் சேவை, செல்பேசி வங்கிச் சேவை போன்றவற்றை பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவது சரியல்ல.
ஐந்து சேவைகளுக்குப் பிறகு கட்டணம் உண்டு என்பதால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாக வரத்தொடங்கினால், கூட்டம் அதிகரிக்கும். ஓர் ஊழியர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூறு பேருக்கு மேல் சேவை அளிக்கமாட்டார். கூடுதலாக ஓர் ஊழியரை நியமித்தால் வங்கிக்கு கூடுதல் செலவுதான். பணம் எடுப்பதற்காக உடனடி பண மையத்தை பயன்படுத்துவது, வாடிக்கையாளர் வங்கிக்கு செய்யும் சேவையே தவிர, வங்கி வாடிக்கையாளருக்கு செய்யும் சேவை அல்ல!
வங்கிகள் தங்கள் கருத்துக்கு ஏற்றபடி சேவைக் கட்டணம் வசூலிப்பதை ரிசர்வ் வங்கியும், அரசும் ஆமோதித்து ஆதரிப்பதாக இருந்தால், அதே அடிப்படையில் வங்கிகளின் வைப்புத் தொகையாக (டெபாசிட்) வாடிக்கையாளர்கள் பணம் போடுவதற்கான வட்டியை அவர்கள் வங்கிகளுடன் பேரம் பேசித் தீர்மானிக்கும் உரிமையை, பணம் முதலீடு செய்பவர்களுக்குக் கொடுப்பதுதானே நியாயம்!
என்ன செய்ய? நமது நாட்டின் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வோ, நுகர்வோர் உரிமைகளைத் தட்டிக் கேட்கும் அமைப்புகளோ இல்லையே. அத்தனை வங்கி வாடிக்கையாளர்களும் இந்தக் கட்டணத்தை எதிர்த்து வங்கிகளில் சேமித்திருக்கும் பணத்தை திரும்பப் பெறுவது என்கிற இயக்கம் மேலெழுமானால் அப்போதுதான், வாடிக்கையாளர்களின் வலிமை வங்கிகளுக்குத் தெரியும்.
பன்னாட்டுத் தனியார் வங்கிகள், நமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது மேம்பட்ட சேவையை அல்ல. வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் நூதன முறையில் கொள்ளையடித்து லாபம் சம்பாதிப்பது என்கிற வித்தைகளையே. அவற்றில் இதுவும் ஒன்று!
No comments:
Post a Comment