Wednesday, November 5, 2014

இப்போதாவது விடிந்ததே...



சுதந்திர இந்தியாவில், குடிமகனுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்குரிமை என்றால், அதற்கு நிகரான வலிமையுடைய இன்னொரு ஆயுதம் அக்டோபர் 2005இல் நடைமுறைக்கு வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம். கோப்புகளில் என்ன குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது, ஒரு பிரச்னை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா? என்ன முடிவு, யாரால் எப்போது எப்படி எடுக்கப்பட்டது போன்ற தகவல்களை இந்தியப் பிரஜை ஒவ்வொருவரும் கேட்டுப் பெற முடியும். இந்த உரிமை முறையாகவும், முழுமையாகவும் மக்கள் நலனுக்காக சமூக அக்கறையுள்ளவர்களால் பயன்படுத்தப்பட்டால், ஊழல், முறைகேடு, பாரபட்சமான சலுகைகள் போன்றவை கணிசமாகக் குறையவும், தவறிழைப்பவர்கள் அடையாளம் காணப்படவும் வழிகோலும்.

இப்படி ஒரு சட்டம், சமூக ஆர்வலர்களின் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு சட்டமாக்கப்பட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. தேசிய அளவில் தலைமைத் தகவல் ஆணையமும், மாநில அளவில் தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டதுடன், எல்லா அரசு அலுவலகங்களிலும் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி கோரப்படும் தகவல்களை அளிப்பதற்கு அலுவலர்கள் ஒதுக்கப்பட்டனர்.

ஆனால், சட்டம் இயற்றப்பட்டு, தகவல் ஆணையம் செயல்படத் தொடங்கியபோதுதான் இந்தச் சட்டம் தங்களது செயல்பாடுகளைப் பட்டவர்த்தனமாக்குவது அரசியல் தலைமைக்கும், அதிகாரவர்க்கத்திற்கும் புரியத் தொடங்கியது. தேவையில்லாத கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றும், அரசின் எல்லாச் செயல்பாடுகளையும் பட்டவர்த்தமானக்குவது நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ஆட்சியாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள முற்பட்டபோது, பரவலான எதிர்ப்பும், சமூக ஆர்வலர்களின் ஒன்றுபட்ட எழுச்சியும், அரசைப் பின்வாங்கச் செய்தது.

தலைமைத் தகவல் ஆணையரின் தலைமையில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், ஊழல் தடுப்பு ஆணையம்போல அரசியல் சட்ட அமைப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. முதல் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட வஜாஹத் ஹபிபுல்லாவைத் தொடர்ந்து, ஏ.எஸ். திவாரி, சத்யேந்திர மிஸ்ரா, தீபக் சந்து, சுஷ்மா சிங், ராஜீவ் மாத்தூர் ஆகியோர் தலைமைத் தகவல் ஆணையர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி ராஜீவ் மாத்தூர் ஓய்வு பெற்றது முதல் தலைமைத் தகவல் ஆணையர் பதவி காலியாகவே இருக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவில் பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெற்றிருப்பார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறும் தகுதியைப் பெறாததால், குழு அமைக்கப்படாமலும், தலைமைத் தகவல் ஆணையர் நியமிக்கப்படாமலும் தொடர்கிறது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் செயலகங்கள், அமைச்சரவைச் செயலர் அலுவலகம், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், அரசுப் பணியாளர் நியமனத் துறை, நாடாளுமன்ற செயல்பாட்டுத் துறை ஆகியவை தொடர்பான தகவல்கள் தலைமைத் தகவல் ஆணையர் அலுவலகத்தால் மட்டுமே தரப்பட வேண்டியவை. தலைமைத் தகவல் ஆணையர் இல்லாததால் இவை தொடர்பான ஏறத்தாழ 9,700 விண்ணப்பங்கள் அந்த அலுவலகத்தில் குவிந்து கிடக்கின்றன. தினந்தோறும் 20 முதல் 30 தகவல்கள் கோரும் மனுக்கள் புதிதாகப் பெறப்படுகின்றன.

"எதிர்க்கட்சித் தலைவர் என்று யாரும் அங்கீகரிக்கப்படாமல் போகும் நிலைமை ஏற்பட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கையில் உள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராகக் கருதப்படுவார்' என்று மக்களவைச் செயலகம் ஜூன் மாதத்திலேயே தெளிவுபடுத்தி இருக்கிறது. அப்படி இருந்தும் கடந்த மூன்று மாதங்களாக அரசு மெத்தனம் காட்டி வந்தது கண்டனத்துக்குரியது.

இப்போது தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், முறைகேடுகளைத் தட்டிக் கேட்கவும் வழிகோலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, பலவீனப்பட்டுவிடக் கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024