டைரக்டரும், கதை - வசன கர்த்தாவுமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவர் தயாரித்த "கற்பகம்'' படத்துக்கு ஒரு புதுமுகத்தை தேடி வந்தார். கே.ஆர்.விஜயா பற்றி அறிந்து, அவரை அழைத்து வரச்சொல்லி நேரில் பார்த்தார்.
தன்னுடைய கற்பகம் கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமானவர் என்று தீர்மானித்து, கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்தார்.
படத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இருந்தார்கள். எனினும், விஜயாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்தார், கே.ஆர்.விஜயா.
"கற்பகம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் மூலம், நட்சத்திர அந்தஸ்து பெற்றார், கே.ஆர்.விஜயா.
"மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா'' என்ற பாடல் காட்சியில், ரசிகர்களை கண் கலங்க வைத்தார்.
பொதுவாக, விஜயாவின் தோற்றமும், புன்னகையும் அனைவரையும் கவர்ந்தன. "கற்பகம்'' ஒரே படத்தின் மூலம், ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்.
"கற்பகம்'' 1963 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியது. அதே சமயத்தில், எம்.ஜி.ஆர். நடித்த "பரிசு'', சிவாஜிகணேசன் நடித்த "அன்னை இல்லம்'' ஆகிய படங்களும் வெளிவந்தன.
இந்தக் கடும் போட்டியை சமாளித்து, வசூலிலும் வெற்றி கண்டது "கற்பகம்.''
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் "கற்பகம்'' என்ற ஸ்டூடியோவை உருவாக்குவதற்கு, இந்தப்படம் அடைந்த வெற்றிதான் காரணம்.
கே.ஆர்.விஜயாவுக்கு ஏக காலத்தில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ்ப்பட உலகில் அவருடைய `சீசன்' தொடங்கியது என்றே கூறலாம்.
சிவாஜிகணேசனுடன் "கை கொடுத்த தெய்வம்'' படத்தில் இணைந்து நடித்தார். இப்படம், 1964 ஜுலையில் வெளியாகியது.
சின்னப்பதேவர் தயாரித்த "தொழிலாளி'' படத்தில், எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். இப்படம் 1964 செப்டம்பரில் வெளியாகியது.
தொடர்ந்து சிவாஜியுடன் "செல்வம்'', "சரஸ்வதி சபதம்'', "கந்தன் கருணை'', "நெஞ்சிருக்கும்வரை'', "இருமலர்கள்'' முதலிய படங்களில் நடித்தார். "இருமலர்கள்'' படத்தில் பத்மினியும் நடித்திருந்தாலும், சிவாஜியை மணக்கும் முறைப்பெண்ணாக விஜயா நடித்தார்.
சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா மூவரும் போட்டி போட்டு நடித்த அற்புத படம் "இருமலர்கள்.''
எம்.ஜி.ஆருடன் நடித்த "பணம் படைத்தவன்'', "விவசாயி'' ஆகிய படங்களும் பெரிய வெற்றி பெற்றன.
பிரபல பட அதிபர் நாகிரெட்டி, "இதயக்கமலம்'' படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
முதலில், சிவாஜிகணேசன், சரோஜாதேவியை வைத்து கறுப்பு - வெள்ளையில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார்கள். பின்னர், புதுமுகங்களைப் போட்டு, கலரில் எடுக்க முடிவு செய்தார்கள். அதன்படி, கே.ஆர்.விஜயாவும், ரவிச்சந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதில் கே.ஆர்.விஜயாவுக்கு இரட்டை வேடம். பிரமாதமாக நடித்தார்.
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இப்படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.
"உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'', "தோள் கண்டேன் தோளே கண்டேன்'', "மலர்கள் நனைந்தன பனியாலே...'' முதலான பாடல்கள் ஹிட் ஆயின.
"பஞ்சவர்ணக்கிளி'', "ராமு'', "பட்டணத்தில் பூதம்'', "தங்கை'' என்று கே.ஆர்.விஜயாவுக்கு வெற்றிப்படங்கள் தொடர்ந்தன.
திருச்சியில் நடந்த விழாவில், கே.ஆர்.விஜயாவுக்கு "புன்னகை அரசி'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சில படங்களில், அம்மன் வேடத்தில் சிறப்பாக நடித்தார்.
புகழின் உச்சியில் இருந்த கே.ஆர்.விஜயா, திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் ஈடுபட முடிவு செய்தார்.
முடிக்க வேண்டியிருந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, பிரபல தொழில் அதிபர் வேலாயுத நாயரை மணந்தார்.
அதன்பின் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தார். ஏராளமான வாய்ப்புகள் வந்தும், அவற்றை உதறித் தள்ளினார்.
No comments:
Post a Comment