Wednesday, November 5, 2014

கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!



ன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ....?  கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.
80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள்.
மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம்.

தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு மூன்று மாநில பேருந்துகளின் இயக்கமும் உண்டு.
கடந்த திங்கள்கிழமை (03.10.14) காலை, வழக்கம்போல  கேரளப்பகுதியான சுல்தான்பத்தேரி என்ற ஊரிலிருந்து  KL 15 7732 என்ற பதிவு எண்கொண்ட கேரள அரசுப்பேருந்து புறப்பட்டது. அதன் ஓட்டுநர்அப்துல் ரஹ்மான். காலை 7.30 மணிக்கு புறப்பட்ட அந்த பேருந்தில் நிற்க இடமில்லாத அளவுக்கு பயணிகள் நிறைந்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடக்கம்.
தமிழக பகுதியான கூடலூர் தாலுகாவுக்குட்பட்ட நெலாக்கோட்டை எனும் இடத்தில், சில பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப புறப்பட்டபோது, பேருந்து ஓட்டுநர் அங்கு தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். மீண்டும் 8.25 மணிக்கு கூவச்சோலை என்ற இடத்தில் ஏழு பயணிகளை ஏற்றியபடி புறப்பட்டது.  பயணிகளின் பேச்சு சத்தமும், பேருந்தின் ஓட்டம் எழுப்பிய என்ஜின் சத்தமும் போட்டிப்போட்டு எதிரொலித்துக்கொண்டிருக்க, அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

பேருந்து இயல்பை மீறி சாலையில் ஓடுவது பயணிகளுக்கு புரிந்தது. கொஞ்ச நேரத்தில் பேருந்து முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகளின் அலறல் அந்தப் பகுதியை அதிரவைத்தது. இத்தனைக்கும் காரணம் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி. வலியில் துடித்தாலும் டிரைவர் அப்துல் ரஹ்மான், ஒரு டிரைவருக்கான கடமை உணர்ச்சியுடன் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காக்கும் பொருட்டு, தன் உடல்நிலையையும் கருதாமல் தன் சக்திக்கும் மீறிய பிரயோகத்துடன் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினார். சாலையின் வலதுபக்கமாக இருந்த குடியிருப்புகளில் மோதாமலும், அதேசமயம் அங்கிருந்த 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துவிடாமல் தடுக்கவும், ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பி அதற்கு மேல் முடியாமல் சரிந்து மயங்கினார்.
இந்த போராட்டத்தை கவனித்துவந்து பிரேமா என்ற பயணி, சட்டென மேற்கொண்டு பேருந்து முந்தி செல்வதை தடுக்கும் வகையில் பேருந்தின் பிரேக்கை அழுத்திப்பிடித்தார். இதனையடுத்து பேருந்து, சாலையோரமாக மண் மேட்டில் மோதி நின்றது. அத்தனை உயிர்களும் காப்பாற்றப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய டிரைவரின் செயலும், அதற்கு துணைநின்ற பிரேமாவின் துணிச்சலும் பயணிகளின் நெஞ்சை நெகிழவைத்துவிட்டது.

பிரேமாவிடம் பேசினோம். அந்த “திக் திக்“ அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''நான் கூடலூரிலுள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். வழக்கமாக இந்த பஸ்ஸில்தான் கூடலூருக்குச் செல்வேன். சம்பவம் நடந்த அன்றும் எப்போதும்போல சரியாக 8:25 மணிக்கு பஸ் வந்தது. கேரளாவில் இருந்து வருவதால், பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும்.
வழியில் ஏறுபவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது. அதனால், நான் எப்போதும் டிரைவர் சீட் அருகே உள்ள பேனட்டில் அமர்ந்துகொள்வேன். ஆனால் அன்று, வழக்கத் தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. டிரைவர் என்னை அமரச் சொன்னபோது, 'இல்லை அண்ணா, நான் நின்றுகொள்கிறேன். கூட்டம் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டு நின்றபடியே பயணம் செய்தேன்.

பேருந்து கிளம்பிய சிறிது தூரம் சென்றதும், திடீரென நிலைதடுமாறியது. டிரைவர், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்தார். அவரால் பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நிலையிலும், தன் சக்தியெல்லாம் திரட்டி ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பியபடி, சீட்டில் சரிந்துவிட்டார். நான் அந்தச் சூழ்நிலையை சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டேன்.
'டிரைவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். உதவிக்கு வாங்க' எனக் கூச்சலிட்டபடியே, டிரைவர் சீட் பகுதிக்குள் புகுந்து பிரேக்கை மிதித்தேன். என் அருகில் இருந்த ஒருவர் ஸ்டீயரிங்கை இடதுபக்கமாக இழுத்துப் பிடித்தபடி இருக்க, பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மண் மேட்டில் மோதி நின்றதுவிட்டது. வலதுபக்கமாக பேருந்து சென்றிருந்தால், வீடுகளில் மோதி 40 அடி பள்ளத்தில் உருண்டிருக்கும். அந்த சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது'' என்ற பிரேமா, ரிலாக்ஸ் ஆக சிறிது நேரம் பிடித்தது.

"பஸ் நின்றதும் உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஜன்னல் வழியே குதிக்க முற்பட்டனர். அவர்களை சமாதானம் செய்து ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னோம். நானும் இன்னொரு பயணியும் டிரைவர் அண்ணாவை பஸ்ஸில் இருந்து ஆம்புலன்ஸுக்கு இறக்கினோம்.
உயிருக்குப் போராடும் சமயத்திலும் எங்களை காப்பாற்ற முயற்சிசெய்த அவரது மனதை நினைத்து பேருந்தில் பயணித்த அனைவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. நாங்கள் பிழைத்துக்கொண்டோம் என்ற மகிழ்ச்சி நீடிப்பதற்குள், மாரடைப்பால் மருத்துவமனைக்குக் கொண்டுபோகும் வழியிலேயே டிரைவர் அண்ணா உயிரிழந்து விட்டார் என்ற தகவல் வந்து வேதனையை ஏற்படுத்திவிட்டது'' என்று கண் கலங்கினார் பிரேமா.
மகத்தான மனித உயிர்களை சாதுர்யமாக காப்பாற்றிய பிரேமாவுக்கு நம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கிளம்பினோம்.

- ஜெ.சசீதரன் (மாணவப் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024