Sunday, November 9, 2014

சென்னை: மெட்ரோ ரயில் செல்வதற்காக சுரங்க பாதை அமைக்கும் பணி இதுவரை 65 சதவீதம் முடிந்துள்ளது.




சென்னை: மெட்ரோ ரயில் செல்வதற்காக சுரங்க பாதை அமைக்கும் பணி இதுவரை 65 சதவீதம் முடிந்துள்ளது. 2015ம் ஆண்டு இறுதிக்குள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறினார். மெட்ரோ ரயிலுக்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என 45 கிமீ தூரம் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகும். இதற்காக சுரங்கம் தோண்டும் பணி 2012 ஜூலை 28ம் தேதி நேரு பூங்காவில் தொடங்கியது. சுரங்கப்பாதையில் 2 வழித்தடங்களிலும் மொத்தம் 36,308 மீட்டர் தூரத்துக்கு (சுமார் 36 கிலோ மீட்டர் தூரம்) 6 மீட்டர் விட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 24 கி.மீ. தூரம் (65 சதவீதம்) சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன. சென்னையின் முக்கிய பகுதியாக திகழும் அண்ணா சாலைக்கு அடியில் இரண்டு வழித்தடத்தில் எல்ஐசி வரை சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது.

அதேபோன்று ஷெனாய் நகரில் இருந்து திருமங்கலம் வரையும், மே தின பூங்காவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டையில் இருந்து உயர் நீதிமன்றம் வரை, எழும்பூரில் இருந்து கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள இடங்களிலும் சுரங்கம் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு , ஆலந்தூர் இடையே உயர்த்தப்பட்ட (மேம்பாலம்) பாதையில் 10 கி.மீ. தூரம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 4 பெட்டிகளை கொண்ட 15 ரயில்கள் தயார் நிலையில் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறும்போது, சென்னையில், சுரங்கப்பாதையில் இதுவரை 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 சதவீதம் பணிகள் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் சுரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024