‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்குக் கிடைத்ததோ செங்கல். ஆனால் அதற்குப் பிறகு பணமும் திரும்பக் கிடைத்ததோடு, எதிர்பாராத விதத்தில் செல்போன் ஒன்றும் பரிசாகக் கிடைத்துள்ளது.கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் அந்த அதிர்ஷ்டக்கார வாடிக்கையாளர்!
தீபாவளி தினத்தன்று தன் மனைவிக்குப் பரிசளிப்பதற்காக ‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆவலோடு பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு பார்சல் வந்தவுடன் அதிர்ச்சி. காரணம், அதற்குள் அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் இல்லை. மாறாக, ஒரு செங்கல்லும், ஒரு விம்பார் சோப்பும் தான் இருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தப் பதிவை 19,000 பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து 'ஸ்நாப் டீல்' வலைத்தளம் அவரிடம் மன்னிப்புக் கேட்டது. மேலும், பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இதற்குக் காரணம் கூரியர் நிறுவனம்தான் என்றும் கூறியது. இதற்கிடையே, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விம் பார் சோப் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தெரியவந்தது.
கிருஷ்ணமூர்த்திக்கு நேர்ந்த அனுபவத்தை அறிந்து, தன்னுடைய சொந்த செலவில் அவருக்கு அவர் ஆர்டர் செய்த செல்போனை அனுப்பி வைத்துள்ளது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம். அதோடு தனது தயாரிப்பான விம் லிக்விட் சோப் இரண்டு பாட்டில்களையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறு கையில், "துரதிர்ஷ்டவசமாக விம் பார் சோப் வாடிக்கையாளர் ஒருவருக்கு எதிர்மறையான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எனினும், இதை ஒரு விளம்பரமாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்களின் பரிசை அந்த வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டது மனநிறைவை உண்டாக்குகிறது" என்றார்.
தனக்கு அடித்த ‘ஜாக்பாட்' குறித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி அந்நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment