Saturday, November 8, 2014

இப்படியுமா ஏ.டி.எம்மில் திருடுவார்கள்?



தானியங்கி பணம் எடுக்கும் எந்திரமான ஏ.டி.எம்.மில் திருட்டு என்பது அந்த எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நடந்துதான் வருகிறது. ஆனால் பெங்களூருவில் நடந்த ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மில் இருந்து, தொடர்ந்து பணம் லட்சக் கணக்கில் திருடப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிக் கூட நூதன முறையில் கொள்ளை அடிக்க முடியுமா? என்று திருட்டையே தொழிலாக வைத்துள்ளவர்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த பெங்களூரூ கொள்ளை.

பெங்களூருவில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம். ஒன்றில்தான் இந்த கைதேர்ந்த கொள்ளை நடந்துள்ளது.வழக்கமாக ஏ.டி.எம். கார்டை திருடி, பின் நம்பர் கண்டுபிடித்து மொத்தப் பணத்தையும் திருடுவார்கள். அல்லது போலி ஏ.டி.எம். கார்டை வைத்தும் திருடுவார்கள்.

மேலும்,ஏ.டி.எம். எந்திரத்தில் பசை தடவிய மெல்லிய குச்சியை விட்டுத் திருடினார்கள். இன்னும் சிலர் மெசினில் பணம் வைக்க வரும் ஊழியர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து பணப் பெட்டிகளை திருடியும் சென்றார்கள். அதன் உச்சக் கட்டமாக சில கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்தும், அதை அப்படியே 'அலேக்கா' தூக்கிச் சென்றும் பணத்தை லபக்கியுள்ளனர். தடுத்த காவலர்களைக் கொல்லவும் கொள்ளையர்கள் தயங்கியதில்லை.

ஆனால் இதில் எதிலுமே அடங்காத கொள்ளைதான் இது. திருட்டில் ஈடுபட்ட அந்த நபர், ஏ.டி.எம். கார்டை செருகி, சரியான பின் நம்பரை டைப் செய்து, தேவையான ரூபாயின் மதிப்பையும் டைப் செய்துவிட்டு சில நொடிகளில் தனது கையை, பணம் வெளிவரும் ஷட்டரில் வைத்து விடுவார். உடனே பணம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் என்று ஏ.டி.எம். எந்திரம் அதில் உள்ள புரோகிராமுக்கு தகவல் அனுப்பிவிடும். அப்படியே அந்த நபர் சில நொடிகள் கழித்து கையை ஷட்டரிலிருந்து எடுத்ததும், ஷட்டரை விட்டு பணம் வெளியே வரும்.

இதனால் எந்த நபரின் அக்கவுண்டிலிருந்து பணம் 'டெபிட்' ஆனாதோ, அந்த நபரின் கணக்கில் அதே தொகை மீண்டும் கிரெடிட் ஆகிவிடும். இதனால் பணம் எடுத்த நபரின் அக்கவுண்டில் பண இருப்பு குறையாமல் அப்படியே இருக்கும்.

இந்த முறையிலேயே 66.58 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு கார்ப்பரேசன் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நூதனக் கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக 15 ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருட்டில் ஈடுபட்டவர்களின் சி.சி.டி.வி. பதிவுகள், கைரேகைகள், ஸ்லிப்புகள், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை வைத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

எப்படியெல்லாம் திருடுறாங்க...ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ..?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024